Crude oil price : கச்சா எண்ணெய் விலை 7 ஆண்டுகளில் இல்லாத உயர்வு: பெட்ரோல்,டீசல் விலை உயருமா?
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கலாம் எனும் அச்சம், பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 7ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்தது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கலாம் எனும் அச்சம், பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 7ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்தது.
முன்னாள் சோவியத் யூனியனில் இருந்த உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு விருப்பமாக இருந்தாலும், அதை சேரவிடாமல் ரஷியா தடுக்கிறது. இதற்காக உக்ரைன் எல்லையில் ரஷ்யா லட்சக்கணக்கான வீரர்களைக் குவித்து வருகிறது.
எந்த நேரத்திலும் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.அதேநேரம், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால், அமெரிக்கா உக்ரைனுக்கு ஆதரவாக இறங்கும் என அதிபர் ஜோ பிடன் எச்சரித்திருப்பது உலகப் போர் மூளும் சூழலைஏற்படுத்தியிருக்கிறது.
இதனால், கடந்த சில வாரங்களாகவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. ஆனால், தற்போது உக்ரைன்-ரஷ்யா நிலைமை படுசூடாக இருப்பதால், போர் மூண்டால் கச்சா எண்ணெய் உற்பத்தி, ஏற்றுமதி, இயற்கை எரிவாயு ஏற்றுமதி ஐரோப்பிய நாடுகளுக்கு பாதிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.
ஏனென்றால், உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் 5 % ரஷ்யா வைத்துள்ளது, ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும்பகுதி ரஷ்யா கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த சூழலில் பொருளதாரத் தடை ரஷ்யா மீது விதி்க்கப்பட்டால் சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் என்ற பதற்றம் நிலவுகிறது.
இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைநெருக்கடியுடனே இருந்தது. பிரன்ட் கச்சா எண்ணெய் பேரல் 95.65 டாலராக உயர்ந்தது அதாவது 1.3% ஒரே நாளில் உயர்ந்தது. கடந்த 2014ம் ஆண்டு அக்டோபரில்தான் ஒருபேரல் 96 டாலர் விற்றது. அதன்பின் இப்போதுதான் அந்த விலைக்குஈடாக வந்துள்ளது.ஏறக்குறைய 7 ஆண்டுகளில் இல்லாத விலையாகும்.
யுஎஸ் டெக்சாஸ் கச்சாஎண்ணெய் விலை 1.4% அதிகரித்து பேரல் 94.38 டாலராக அதிகரித்தது. கடந்த 2014 செப்டம்பர் மாதம் கடைசியாக 94.94 டாலராக விற்றது அதன்பின் இப்போதுதான அதேவிலைக்கு ஈடாக வந்துள்ளது.
கச்சா எண்ணெய் குறித்த சர்வதேச ஆய்வாளர் எட்வார்ட் மோயா கூறுகையில், “ உக்ரைன் மீதுரஷ்யா போர் தொடுத்தால் பிரன்ட் கச்சா எண்ணெய் நிச்சயமாக பேரல் 100 டாலரைக்க டந்துவிடும். இனிமேல் கச்சா எண்ணெய் தொடர்ந்து நிலையற்றதாகவே இருக்கும். உக்ரைன் ரஷ்யா சம்பவங்களைப் பொறுத்து விலையில் மாற்றம் இருக்கும்” எனத் தெரிவித்தார்
இதற்கிடையே பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் அமைப்பான ஒபேக், மார்ச் மாதம் வரை தினசரி 4 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் பேரல்களை கூடுதலாக உற்பத்தி செய்வதிலும் சிக்கல் இருப்பதாகக் கூறியுள்ளது.இதனால், உக்ரைன், ரஷ்யா பதற்றம் தீவிரமானால் கச்சா எண்ணெய் தேவையை கடுமையாக உயர்த்தும்.
சந்தை ஆய்வாளர் மைக் ட்ரான் கூறுகையில் “ நிச்சமயாக இந்த ஆண்டு கோடை காலத்தில் கச்சா எண்ணெய் விலை பேரல் 115 டாலர் வரை உயரக்கூடும். ஒபேக் கூட்டமைப்பு கச்சா எண்ணெய்உற்பத்தியை உயர்த்தாதது முக்கியக் காரணம். மேலும், அமெரிக்கா-ஈரான் இடையிலான அணு சக்தி ஒப்பந்த பேச்சு மீண்டும் தொடங்குவதையும் முதலீட்டாளர்கள் பார்த்து வருகிறார்கள். இவை அனைத்தும் சேர்ந்துதான் விலையைத் தீர்மானிக்கும்” எனத் தெரிவித்தார்
பெட்ரோல் டீசல் விலை உயருமா
இந்தியாவைப் பொறுத்தவரை சர்வதேசந்தையில் தொடர்ந்து இரு வாரங்கள் நிலவும் விலை நிலவரத்தின் அடிப்படையில்தான் தினசரி விலை மாற்றம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் கடந்த 90 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லாமல் இருக்கிறது. தற்போது 5 மாநிலங்களில் தேர்தல் நடந்து வருவதால், விலை உயர்வு தேர்தலில் மோசமான முடிவுகளை கொடுக்கலாம் என்பதால், மத்திய அரசு விலை உயர்வை அமல்படுத்தாமல்இருக்கிறது.
ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்விலை மிகப்பெரிய உயர்வை நோக்கி நகர்ந்துள்ளதால், 5மாநிலத் தேர்தல் முடிந்தபின் பெட்ரோல், டீசல் விலையில் மிகப்பெரிய உயர்வை மக்கள் சந்திக்க வேண்டியதிருக்கும் என்று ஏற்கெனவே பல பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலை உயர்வை நிச்சயமாக எண்ணெய் நிறுவனங்கள் தாங்காது, அதை மக்கள் மீது திருப்பும்போது பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரக்கூடும் என சந்தை நிலவரங்க்ள் தெரிவிக்கின்றன