nse scam news : தேசியப் பங்குச்சந்தையில் கோலோகேஷன் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள என்எஸ்இ தலைவரின் முன்னாள் ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
தேசியப் பங்குச்சந்தையில் கோலோகேஷன் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள என்எஸ்இ தலைவரின் முன்னாள் ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
கோ-லோகேஷன் ஊழல்
என்எஸ்இ தலைமை நிர்வாக அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணன் 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை இருந்தபோது நடந்தது கோ-லொகேஷன் ஊழல். அதாவது, என்எஸ்இ சர்வர்களுக்கு அருகே சில குறிப்பிட்ட பங்கு நிறுவனங்கள், தரகர்களின் சர்வர்களை வைத்து பங்குவர்த்தக தகவல்களை விரைவாக பகிர்ந்த கொள்ள உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் சிபிஐ கடந்த 2018ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது

ஆனந்த் கைது
இந்த வழக்கில் சில பங்குவர்த்தகர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறி கடந்த மாதம் 25ம் தேதி சித்ரா ராமகிருஷ்ணன் ஆலோசகராக இருந்த ஆனந்த் சுப்பிரமணியனை சிபிஐ கைது செய்தது.
அபராதம்
சித்ராவின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஆனந்த் சுப்பிரமணியத்தை விதிகளை மீறி நியமித்து அவருக்கு குறுகிய காலத்தில் ஏராளமான ஊதிய உயர்வை சித்ரா வழங்கியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதுமட்டுமல்லாமல் இமயமலை யோகி ஒருவரின் ஆலோசனையின்படிதான் என்எஸ்இ அமைப்பையே சித்ரா நடத்தியுள்ளார் என்று பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபியின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சித்ராவுக்கு ரூ.3 கோடியும், ஆனந்த் சுப்பிரமணியத்துக்கு ரூ.2 கோடியும் அபராதமாக செபி விதித்தது.

ஜாமீன் மனு
இதற்கிடையே கோ-லொகேஷன் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆனந்த் சுப்பிரமணியன் ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரை ஏற்கெனவே 14 நாட்கள் விசாரணைக்கு எடுத்து சிபிஐ விசாரித்து முடித்தநிலையில் தற்போது நீதிமன்ற காவலி்ல் ஆனந்த் சுப்பிரமணியம் உள்ளார்.
யோகியில்லை
இந்நிலையில் ஆனந்த் சுப்பிரமணியன் ஜாமீன் மனுவை நீதிபதி சஞ்சீவ் அகர்வால் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்பிரமணியன் வழக்கறிஞர் தரப்பு கூறுகையில் “ கோ-லோகேஷன் வழக்கின் முதல்தகவல் அறிக்கையில் ஆனந்த் சுப்பிரமணியன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், வழக்கிற்கும் அவருக்கும் தொடர்பு இ்ல்லை. ஆதலால் அவருக்கு ஜாமீன் வழங்கிட வேண்டும். இமயமலை யோகி ஆனந்த் சுப்பிரமணியம் என்ற வாதம் தவறானது” எனத் தெரிவித்தனர்.

முகத்திரை அகற்றப்படும்
இதற்கு நீதிபதி அகர்வால் “ இமயமலை யோகியின் உண்மையான முகத்தை கண்டுபிடிக்கும் முயற்சியிலும், அந்த முகத்திரையை அகற்றும் பணியில் சிபிஐ அமைப்பு ஈடுபட்டு வருகிறது. விசாரணை நடந்து வரும் நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தபின்புதான் ஜாமீன் குறித்து முடிவு எடுக்க முடியும். ஆதலால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்கிறேன்” எனத் தெரிவித்தார்
