ரிலையன்ஸ் முக்கிய பொறுப்பில் இருந்து நீடா அம்பானி விலகல்; ஈஷா, ஆகாஷ், ஆனந்துக்கு முக்கிய பொறுப்பு!!
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) இயக்குநர்கள் குழுவில் ஈஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி ஆகியோரை நியமிக்க ரிலையன்ஸ் வாரியம் பரிந்துரைத்துள்ளது. முன்னதாக இவர்களுக்கு வழிவிடும் வகையில் இயக்குனர்கள் குழுவில் இருந்து நீடா அம்பானி விலகினார்.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் 46வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய இதன் தலைவர் முகேஷ் அம்பானி, ''ஆர்ஐஎல் கடந்த 10 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக 150 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது. இது இந்தியாவில் உள்ள மற்ற நிறுவனங்களை விட அதிகம்.
ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் லிமிடெட்டின் ஒருங்கிணைந்த வருவாய் ரூ.9,74,864 கோடியாகவும், 2023 ஆம் நிதியாண்டில் வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு முந்தைய வருவாய் ரூ.1,53,920 கோடியாகவும், நிகர லாபம் ரூ.73,670 கோடியாகவும் இருந்தது'' என்றார்.
மனிதவள மேம்பாடு, நியமனம் மற்றும் ஊதியக் குழுவின் பரிந்துரையின் பேரில், நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு இன்று நடைபெற்ற கூட்டத்தில், ஈஷா எம். அம்பானி, ஆகாஷ் எம். அம்பானி, ஆனந்த் எம். அம்பானி ஆகியோரை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இயக்குநர்கள் குழுவில் சேர்க்க பரிந்துரைத்தது. பங்குதாரர்களின் ஒப்புதலுக்குப் பிறகு, பதவி ஏற்கும் தேதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில், நிறுவனத்தின் செயல்படாத இயக்குநர்களாக இருப்பார்கள்'' என்று ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் லிமிடெட் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அதிகரிக்கும் சிங்கப்பூர் நிறுவனங்கள்! போட்டி போடும் புதிய மற்றும் நவீன நிறுவனங்கள்!
இயக்குநர்கள் குழுவில் இருந்து நீடா அம்பானி ராஜினாமா செய்துள்ளார். இருந்தாலும் அவர் தொடர்ந்து அனைத்து வாரியக் கூட்டங்களிலும் நிரந்தர அழைப்பாளராக பங்கேற்பார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீடா அம்பானியின் ராஜினாமாவை இயக்குநர்கள் குழு ஏற்றுக்கொண்டுள்ளது.
முகேஷ் அம்பானி முதன் முதலாக 2021 ஆம் ஆண்டில் தனது வாரிசுகள் குறித்துப் பேசினார். அதன்படி, தனது மூன்று பிள்ளைகளுக்கும் தனித் தனி நிறுவன நிர்வாகங்களை ஒப்படைத்துள்ளார். புதிய ஆற்றல், வணிகம் தொடர்பான நிறுவனங்களை தனது இளைய மகன் ஆனந்திடமும், தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் வணிகம் மூத்த மகன் ஆகாஷ்ஷிடமும், மகள் ஈஷாவுக்கு சில்லறை வணிகத்தையும் ஒதுக்கிக் கொடுத்துள்ளார்.
ஆதார் நம்பரை மட்டும் வைத்து வங்கிக் கணக்கை ஹேக் செய்ய முடியுமா?
கடந்த ஆண்டு, ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட்டின் தலைவராவதற்கு மூத்த மகன் ஆகாஷ்க்கு முகேஷ் அம்பானி வழி விட்டார். இருந்தாலும், ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தை வைத்திருக்கும் ஜியோ பிளாட்ஃபார்ம்களின் தலைவராக முகேஷ் அம்பானி நீடித்து வருகிறார்.