அமெரிக்க பங்குச் சந்தையின் வீழ்ச்சி மற்றும் அமெரிக்க கடன் மதிப்பீடு குறைப்பு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி திடீரென சரிவை சந்தித்தன. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர்.
திடீரென சறுக்கிய இந்திய பங்கு சந்தைகள்
போர் பதற்றம் இல்லை, சர்வேத அளவில் எந்த பாதிப்புகளும் இல்லை என்ற நிம்மதியுடன் அசால்டாக பங்கு வணிகத்தில் இறங்கிய முதலீட்டாளர்களுக்கு திடீரென அதிர்ச்சியை கொடுத்தன இந்திய பங்குச்சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி. வர்த்தகத்தின் நடுவே மும்பை பங்குச்சந்தை குறியீட்டென் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகள் சரிவடைந்தது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டென் நிஃப்டி 280 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது. இதனால் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் சுமார் ரூ.2.6 லட்சம் கோடியை இழந்ததாக கூறப்படுகிறது.
முக்கிய பங்குகள் விலை வீழ்ச்சி
அமெரிக்க பங்குச் சந்தையின் வீழ்ச்சிதான் இந்திய பங்கு சந்தைகளின் சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. சந்தை சரிவால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 1.5 சதவீதமும், வாகன உற்பத்தி , அன்றாடபயன்பாட்டு பொருட்கள், ஐடி, பார்மா, நுகர்வோர் சாதனங்கள் மற்றும் எண்ணெய் & எரிவாயு துறைகள் 1 சதவீதம் முதல் 1.5 சதவீதம் வரை சரிவடைந்தன. எச்டிஎஃப்சி பங்குகள் விலையும் சரிவை சந்தித்தன.
எந்த பங்குகள் எத்தனை சதவீதம் வீழ்ச்சி
டெக் மஹிந்திரா பங்கு 2.5 சதவீதமும் பவர் கிரிட் பங்கு 2.14 சதவீதமும் எச்.சி.எல் டெக் பங்கு 2% சதவீதமும் சரிவடைந்தன. மிட்கேப் நிறுவனங்களில், ஆயில் இந்தியா பங்குகள் எப்போதும் இல்லாத அளவுக்கு 4 சதவீதம் சரிவடைந்தன, அசோக் லேலேண்ட் பங்குகள் 2.5 சதவீதமும், டிக்சன் ஷேர் 2.4 சதவீதமும், யூனோ மிண்டா பங்கு 2.38% சதவீமும் சரிவடைந்தன.
இதுவே காரணம்
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அமெரிக்க கடன் மதிப்பீட்டை குறைத்ததால், உலகளாவிய சந்தைகளில் முதலீட்டாளர்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர், அதனால் அமெரிக்க, ஆசிய பங்கு சந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிப்பதே சரிவுக்கு காரணம் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பத்திரங்கள் வாங்குவதை அமெரிக்க முதலீட்டாளர்கள் குறைத்ததும் இந்திய சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறியதும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியின் சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.
சந்தை ஆலோசகர்கள் அட்வைஸ்
சந்தைகள் வீழ்ச்சி அடைந்தாலும், அவசரம் காட்டாமல் விலை குறைவான பங்குகளை வாங்கி முதலீட்டாளர்கள் லாபம் ஈட்டலாம் என சந்தை நிபுணர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள். அமரிக்க அதிபர் ட்ரம்ப் ஏதேனும் நல்ல அறிவிப்புகளை வெளியிட்டால் அமெரிக்க சந்தைகளுடன் சேர்ந்து இந்திய சந்தையும் உச்சம் தொடும் எனவும் அவர்கள் அலோசனை வழங்குகிறார்கள்.
