மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் காலை சரிவுடன் தொடங்கி மாலையில் உயர்வுடன் வர்த்தகத்தை முடித்துள்ளன. கடந்த 2 நாட்களுக்குப்பின் மீண்டும் சந்தையில் உயர்வு வந்துள்ளது.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் காலை சரிவுடன் தொடங்கி மாலையில் உயர்வுடன் வர்த்தகத்தை முடித்துள்ளன. கடந்த 2 நாட்களுக்குப்பின் மீண்டும் சந்தையில் உயர்வு வந்துள்ளது.

அமெரிக்காவில் பங்குப்பத்திரங்கள் மூலம் கிடைக்கும் ஆதாயம் அதிகரிப்பு, வட்டிவீதம் உயரலாம் என்ற தகவல், சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தாக்கம் போன்றவற்றால்முதலீட்டாளர்கள் நம்பிக்கையிழந்தனர்.

கச்சா எண்ணெய் விலை உயர்வும் முதலீட்டாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியது. ஆசியப் பங்குச்சந்தையும் சரிவில் இருந்ததால், முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வர்த்தகத்தில் ஈடுபடவில்லை, இதனால் காலையிலிருந்தே சரிவு காணப்பட்டது.

ஆனாலும் வர்த்தகத்தின் இடையே கடும் ஊசலாட்டம் காணப்பட்டது. பங்குகள் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. இதனால் கணிக்க முடியாத நிலை இருந்தது.ஆனால், பிற்பகலுக்குப்பின் வர்த்தகம் சூடுபிடிக்கத் தொடங்கி, ஏறுமுகத்தில் பயணிக்கத் தொடங்கியது. 

மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 233 புள்ளிகள் உயர்ந்து, 61,133 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 68 புள்ளிகள் அதிகரித்து, 18,191 புள்ளிகளில் முடிந்தது. 

மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில் 10 நிறுவனப் பங்குகள் சரிவில் முடிந்தன, மற்ற 20 நிறுவனப் பங்குகள் லாபமீட்டின.

நிப்டியில் பார்தி ஏர்டெல், எய்ச்சர் மோட்டார்ஸ், எஸ்பிஐ, டாடா ஸ்டீல், இன்டஸ்இன்ட் வங்கி ஆகிய நிறுவனங்கள் அதிகலாபமீட்டின. அப்போலோ மருத்துவமனை, டாடா மோட்டார்ஸ், டிவிஸ் லேப்ரட்ரீஸ், டைட்டன் நிறுவனம், அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆகிய நிறுவனப் பங்குகள் சரிவில் முடிந்தன.

நிப்டியில் வங்கித்துறை, உலோகத்துறை, எண்ணெய் மற்றும் எரிவாயுப்பங்குகள் தலா ஒருசதவீதம் வளர்ச்சி அடைந்தன.