நந்தன் நிலேகனி ஆதாரின் தலைமை வடிவமைப்பாளராகவும் குறிப்பிடப்படுகிறார் மேலும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) தலைவராகவும் இருந்தார்.
நந்தன் நிலேகனி இந்திய தொழில்முனைவோர் பட்டியலில் முதன்மையானவர்களில் ஒருவர். முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸின் ஏழு இணை நிறுவனர்களில் ஒருவர். 2002 முதல் 2007 வரை இந்தியாவின் இரண்டாவது பெரிய தொழில்நுட்ப சேவை நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய நந்தன் நிலேகனி, தற்போது நிறுவனத்தில் செயல் அல்லாத தலைவர் (non-executive chairman) பதவியில் பணியாற்றுகிறார். நந்தன் நிலேகனி ஆதாரின் தலைமை வடிவமைப்பாளராகவும் குறிப்பிடப்படுகிறார். மேலும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) தலைவராகவும் இருந்தார்.
யார் இந்த நந்தன் நிலேகனி?
நந்தன் நிலேகனி கொங்கனி பிராமணர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர். தனது ஆரம்பக் கல்வியை கர்நாடகாவின் பிஷப் காட்டன் பாய்ஸ் பள்ளி மற்றும் செயின்ட் ஜோசப் உயர்நிலைப் பள்ளி, ஆகியவற்றில் முடித்தார். மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் மின் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1978-ல், நந்தன் நிலேகனி மும்பையை தளமாகக் கொண்ட பாட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்தார், அங்கு அவர் NR நாராயண மூர்த்தியை சந்தித்தார்.
கடந்த ஆண்டு, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூர்ந்தது. இந்த விழாவில், நந்தன் நிலேகனியை வேலைக்கு எடுத்த கதையை நாராயண மூர்த்தி நினைவு கூர்ந்தார். நந்தன் நிலேகனி பாட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸில் (பிசிஎஸ்) சாப்ட்வேர் தலைவராகப் பணிபுரிந்தபோதும், நாராயண மூர்த்தி தனது 'கற்றல் திறன் தேர்வை' மேற்கொள்ள தயங்கவில்லை. நாராயண மூர்த்தி உருவாக்கிய IQ சோதனையை நந்தன் ஒன்றரை நிமிடத்தில் தீர்த்துவைத்தார்.
நாராயண மூர்த்தி இதுகுறித்து பேசிய போது "நான் மேட்ரிக்ஸ் சுழற்சி எனப்படும் IQ சோதனையை உருவாக்கியிருந்தேன், உண்மையில் புத்திசாலிகள் அதை ஒன்றரை நிமிடங்களில் செய்தார்கள், நியாயமான புத்திசாலிகள் அதை 5 நிமிடங்களில் செய்தார்கள், அவர் (நந்தன் நிலேகனி) அதை சுமார் ஒன்றரை நிமிடங்களில் செய்தார். "என்று தெரிவித்தார்.
நந்தன் நிலேகனி 2009 இல் இன்ஃபோசிஸை விட்டு வெளியேறி 2017 இல் மீண்டும் அழைத்து வரப்பட்டார். தற்போது, இன்ஃபோசிஸின் செயல் அல்லாத தலைவராக உள்ள அவர், சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய கவுன்சிலின் (ICRIER) கவர்னர் குழுவின் உறுப்பினராகவும், NCAERன் தலைவராகவும் உள்ளார்.
இதனிடையே நந்தன் நிலேகனி, அரசியல் களத்திலும் இறங்கினார். 2014 லோக்சபா தேர்தலில் பெங்களூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தலில் வெற்றி பெறவில்லை. நந்தன் நிலேகனியின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.21,453 கோடி என ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
