பிரதமர் மோடியால் மட்டும் நான் வளர்ந்துவிடவில்லை; ராஜீவ் காந்தி காலத்தில் எனது பயணம் துவங்கியது: கவுதம் அதானி!
என்னுடைய தொழில் வளர்ச்சியை பிரதமர் மோடியின் கால கட்டத்துடன் மட்டும் இணைத்துப் பேச முடியாது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அதானி குழுமத்தின் பயணம் தொடங்கியது என்று இந்தியாவின் பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பிரபல தொழிலதிபர் மட்டுமில்லாமல் உலகிலேயே 155.4 பில்லியன் டாலர்களுடன் இரண்டாம் பணக்காரராக வலம் வருபவர் கவுதம் அதானி. 2022 ஆம் ஆண்டில் கவுதம் அதானியின் பங்குகள் முதலீட்டர்களை ஏமாற்றாமல் லாபத்தைக் கொடுத்துள்ளது. மும்பையில் இருக்கும் தாராவியை மறுசீரமைக்கும் மிகப் பெரிய திட்டத்தையும் அதானி குழுமம் எடுத்துக் கொண்டுள்ளது. இப்படி நாட்டின் பெரிய பெரிய திட்டங்கள் அதானியின் கைக்கு மட்டும் ஏன் செல்கிறது என்ற கேள்வி எழுந்தவாறு இருக்கிறது. இதுபோன்று இவர் மீதான விமர்சனங்களுக்கு இந்தியா டுடேவுக்கு அளித்து இருக்கும் பதிலில் தெரிவித்துள்ளார்.
''நானும், பிரதமர் மோடியும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இதுதான் என் மீதான அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் குற்றம்சாட்டுவதற்கு இலக்காகி இருக்கிறது. என் மீது குற்றச்சாட்டுகள் எழுந்து இருப்பது மிகவும் துரதிஷ்டவசமானது. எங்கள் குழுவின் வெற்றியை குறுகிய கால லென்ஸ் மூலம் பார்க்கின்றனர். உண்மை என்னவென்று பார்த்தால், எனது தொழில்முறை வெற்றியானது எந்தவொரு தனிப்பட்ட தலைவராலும் நிகழ்ந்தது இல்லை. மாறாக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பல தலைவர்கள் மற்றும் அரசாங்கங்களால் தொடங்கப்பட்ட கொள்கை மற்றும் நிறுவன சீர்திருத்தங்களால் கிடைத்ததாகும்.
இதுதான் என் ஸ்டைல்! ரத்தன் டாடா கூறும் சக்சஸ் டிப்ஸ்
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில், ஏற்றுமதி, இறக்குமதி கொள்கையை முதன்முதலில் தாராளமயமாக்கியபோது இது தொடங்கியது. இது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். இதையடுத்து இரண்டாவது முறையாக 1991ஆம் ஆண்டில் நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்தபோது, அவர்கள் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் பெரிய வளர்ச்சியைப் பெற்றேன். மற்ற தொழிலதிபர்களைப் போலவே நானும் பலன் அடைந்தேன்.
குஜராத் மாநிலத்தில் 1995ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கேசுபாய் பட்டேல் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். அப்போது எனக்கு மூன்றாவது திருப்பு முனை கிடைத்தது. கடல்சார்ந்த வணிகத்தின் மீது அப்போது கவனம் செலுத்தினேன். முந்த்ரா துறைமுகத்தை முதன் முறையாக அமைத்தேன். இதற்குப் பின்னர் நான்காவது திறப்பு முனை, 2001ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தின் முதல்வராக மோடி பதவியேற்ற பின்னர் நடந்தது. அவரது கொள்கைகள் மற்றும் அவற்றை செயல்படுத்தியது மாநிலத்தின் பொருளாதார எல்லையை மாற்றியது மட்டுமல்லாமல், தொழில்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மாற்றியமைத்தது. இன்று, அவரது திறமையான தலைமையின் கீழ், தேசிய மற்றும் சர்வதேச நாடுகளில் இதேபோன்ற மறுமலர்ச்சியை காண்கிறோம். தற்போது புதிய இந்தியா தன்னை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது.
நான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் திருபாய் அம்பானியால் ஈர்க்கப்பட்டேன். இந்தியாவில் வளரும் மில்லியன் கணக்கான தொழில்முனைவோருக்கு திருபாய் அம்பானி உத்வேகம் அளித்து வருகிறார். எந்த ஆதரவும் அல்லது ஆதாரமும் இல்லாமல், அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக ஒரு எளிமையான மனிதர் எப்படி உலகத் தரம் வாய்ந்த வணிகக் குழுமத்தை நிறுவி, ஒரு மிகப்பெரிய பாரம்பரியத்தையும் விட்டுச் சென்றுள்ளார். நான் முதல் தலைமுறை தொழில்முனைவோராக, திருபாய் அம்பானியால் ஈர்க்கப்பட்டேன்.
எங்கள் வர்த்தகம் அனைத்தும் தொழில்முறை சார்ந்த, திறமையான அதிகாரிகளால் நடத்தப்படுகின்றன. அவர்களின் அன்றாட செயல்பாட்டில் நான் தலையிதுவதில்லை. ஆலோசனை வழங்குவது, மூலதன ஒதுக்கீடு மற்றும் அவற்றின் மதிப்பாய்வு ஆகியவற்றில் மட்டுமே நான் தலையிடுகிறேன். அதனால்தான் பல்வேறு நிறுவனங்களை நிர்வகிப்பது மட்டுமல்லாமல், பல புதிய தொழில்களை உருவாக்கவும், கையகப்படுத்தவும், புதிய வாய்ப்புகளைத் தேடவும் எனக்கு நேரம் கிடைக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.