மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன்ஆர் EV மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படாது என தகவல் வெளியாகி உள்ளது.
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான மாருதி சுசுகி இந்தியாவில் அறிமுகம் செய்யும் முதல் எலெக்ட்ரிக் மாடலாக வேகன்ஆர் EV இருக்கும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. 2018 செப்டம்பர் மாதம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் மாருதி சுசுகி நிறுவனமும் வேகன்ஆர் EV ப்ரோடோடைப் மாடலை அறிமுகம் செய்தது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்று இருந்தார்.
ப்ரோடோடைப் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து இதன் சோதனையும் சில மாதங்களில் துவங்கி நடைபெற்று வந்தது. மாருதி சுசுகியின் எலெக்ட்ரிக் வாகனம் பற்றி சந்தையில் அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. எனினும், இந்த மாடல் அறிமுகம் செய்யப்படவே இல்லை. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி மாருதி சுசுகி வேகன்ஆர் EV மாடலை வெளியிடும் திட்டத்தை கைவிட்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக டொயோட்டா நிறுவனத்துடன் இணைந்து மாருதி சுசுகி நிறுவனம் தனது குர்கிராம் ஆலையில் வேகன்ஆர் EV மாடலின் 50 ப்ரோடோடைப் யூனிட்களை உற்பத்தி செய்தது. இந்த மாடலில் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம், முழு சார்ஜ் செய்தால் 130 கிலோமீட்டர் வரை செல்லும் ரேன்ஜ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதே மாடலின் ப்ரோடக்ஷன் ரெடி மாடல் சாலைகளில் சோதனைக்கும் வந்தது.
இந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் அறிமுகம் செய்யப்படலாம் என்ற நிலையில் இருந்த வேகன்ஆர் EV மாடல் இனி, அறிமுகம் செய்யப்படாது என்ற தகவல் மட்டுமே வெளியாகி இருக்கிறது. மேலும் மாருதி சுசுகி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கார் 2025 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அறிவித்துவிட்டது. மாருதி சுசுகி நிறுவனம் தற்போது மிட்-சைஸ் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலை உருவாக்கி வருகிறது. அளவில் இந்த மாடல் கிரெட்டாவை விட பெரியதாக இருக்கும் என கூறப்படுகிறது.
