இந்தியா - சீனா இடையேயான எல்லை விவகாரத்தின் விளைவாக, சீன பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை, சீன பொருட்கள் புறக்கணிப்பு ஆகிய குரல்கள் இந்தியாவில் வலுத்துள்ளதுடன், இந்திய மக்கள் சீன பொருட்கள் மற்றும் மொபைல் அப்ளிகேஷன்களை புறக்கணிக்க தொடங்கியுள்ளனர்.

இந்தியா - சீனா வர்த்தகம்:

சீனாவிலிருந்து 70 பில்லியன் அமெரிக்கன் டாலர் மதிப்பிற்கு இறக்குமதி செய்யும் இந்தியா, வெறும் 16 பில்லியன் அமெரிக்கன் டாலர் மதிப்பிற்கு மட்டுமே ஏற்றுமதி செய்கிறது. சீனாவுடன் தான் இந்தியா மிகமோசமான வர்த்தக பற்றாக்குறையை கொண்டிருக்கிறது. 

வர்த்தக பற்றாக்குறை:

வர்த்தக பற்றாக்குறை என்பது, ஒரு குறிப்பிட்ட நாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் மதிப்பைவிட ஏற்றுமதி செய்யும் மதிப்பு எந்தளவிற்கு குறைவாக இருக்கிறது என்பதுதான். அப்படி பார்த்தால், இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை, சீனாவுடன் தான் அதிகமாகவுள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதியை குறைத்து, இந்த பற்றாக்குறையை குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு எடுத்துவருகிறது.

சீன ராணுவம் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடத்திய தாக்குதல், இந்தியா - சீனா உறவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சீன பொருட்களை இந்திய மக்கள் தாங்களாகவே முன்வந்து புறக்கணிக்க தொடங்கியுள்ளனர். சீன மொபைல் அப்ளிகேஷன்களையும் ஏராளமான இந்தியர்கள் மொபைலிலிருந்து நீக்கிவருகின்றனர். 

சீனாவுடனான ராணுவ மற்றும் வர்த்தக அணுகுமுறையில் மாற்றம்:

சீனாவுடனான ராணுவ ரீதியான மற்றும் வர்த்தக ரீதியான அணுகுமுறையை முழுவதுமாக மாற்றியுள்ளது இந்திய அரசாங்கம். நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை ராணுவ உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், இந்திய ராணுவ வீரர்களுக்கு, சீனா விவகாரத்தில் முழு அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன ராணுவம் தாக்குதல் நடத்தினால், இந்திய ராணுவம் பதிலடி கொடுப்பதற்கு முழு சுதந்திரமும், களச்சூழலின் அடிப்படையில், சுயமாக முடிவெடுக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல வர்த்தக ரீதியிலும் இந்தியா கண்டிப்பு காட்ட தொடங்கியுள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தரமற்ற பொருட்களை தடை செய்யும் நோக்கில், சீன பொருட்களின் தரத்தை ஆராயுமாறு உத்தரவிட்டுள்ள இந்திய அரசு, சீன மற்றும் இந்திய(உள்நாட்டு உற்பத்தி) பொருட்களுக்கு இடையேயான விலை வித்தியாசத்தை ஆராயுமாறும் உத்தரவிட்டுள்ளது. தரம் குறைந்த சீன பொருட்களை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கு தடைவிதித்து, அதன்மூலம் இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்த முடிவு செய்துள்ளது. 

மொபைல் ஃபோன்கள், எலக்ட்ரிக்கல் - எலக்ட்ரான்க் பொருட்கள், ஆட்டோமொபைல் பாகங்கள், மருந்து உற்பத்திக்கான மூலப்பொருட்கள் ஆகியவை தான் சீனாவிலிருந்து இந்தியா அதிகமாக இறக்குமதி செய்யும் பொருட்கள். எனவே அவற்றின் தரத்தை ஆராய்ந்து, சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்த இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. 

அதேபோல சீன நிறுவனங்களின் முதலீடுகளுக்கும் ஆப்பு அடித்து வருகிறது இந்திய அரசு. இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, 2015லிருந்து 2019 வரையிலான காலக்கட்டத்தில் சீன நிறுவனங்கள் இந்தியாவில் 1.8 டிரில்லியன் அமெரிக்கன் டாலர் மதிப்பிற்கு முதலீடு செய்திருக்கின்றன.

இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் சம்பவத்தின் விளைவாக, சீன நிறுவனங்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.5000 கோடி மதிப்பில் முதலீடு செய்வதற்காக போடப்பட்டிருந்த ஒப்பந்தத்தை அதிரடியாக ரத்து செய்துள்ளது மகாராஷ்டிரா அரசு. 

மகாராஷ்டிர மாநில அரசு நடத்திய முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்ற சீனாவின் கிரேட்வால் மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.3,770 கோடி மதிப்பீட்டில் வாகனத் தொழிற்சாலை அமைக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.

அதேபோல, பி.எம்.ஐ எலக்ட்ரோ மொபிலிட்டி, சீனாவின் ஃபோட்டான் நிறுவனத்துடன் சேர்ந்து ரூ.1000 கோடி முதலீட்டில் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க உடன்பாடு கையொப்பமானது.  ஹெங்க்லி எஞ்சினியரிங் நிறுவனத்தின் ரூ.250 கோடி மதிப்புள்ள விரிவாக்கத் திட்டத்துக்கும் உடன்பாடு கையொப்பமானது.

மேற்கண்ட 3 ஒப்பந்தங்களையும் அதிரடியாக ரத்து செய்துள்ளது மகாராஷ்டிரா அரசு. மத்திய அரசுடன் ஆலோசித்து, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அம்மாநில தொழிற்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் தெரிவித்துள்ளார்.