மானியம் இல்லாத வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.76 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னையில் மானியம் இல்லாத எரிவாயு சிலிண்டர் விலை ரூ.620-ல் இருந்து ரூ.696-ஆக உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை அடிப்படையில் இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதத்துக்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் இந்த மாதத்துக்கான சமையல் எரிவாயு விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், கடந்த மாதத்தைக் காட்டிலும் வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்துள்ளது. 

சென்னையில் கடந்த மாதம் மானியமில்லா சிலிண்டரின் விலை 620 ரூபாயாக இருந்தது. இந்த மாதம் 76 ரூபாய் உயர்ந்து, 696 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் ரூ.681.50, கொல்கத்தாவில் ரூ.706, மும்பையில் ரூ.651 என்ற அளவில் மானியமில்லா சிலிண்டரின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 3-வது மாதமாக மானியமில்லா எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.