பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து மக்களை வேதனைக்கு உள்ளாக்கி வரும் நிலையில், அடுத்த அதிர்ச்சியாக மானியமில்லாத சமையல் சிலிண்டர் விலை ரூ.59 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன்படி மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.59  உயர்த்தப்பட்டுள்ளது, மானியத்துடன் வழங்கப்படும் சமையல் சிலிண்டர் விலை ரூ.2.89 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த விலை அந்த மாநிலங்களின் போக்குவரத்து செலவு, வரி உள்ளிட்டவைகளைப் பொருத்து உயரும். 

இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துவிட்டது. இது குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: டெல்லியில் மானியமில்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.59 அதிகரிக்கப்பட்டுள்ளது. மானியத்துடன் வழங்கப்படும் சிலிண்டர் விலை ரூ.2.89 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மானிய சிலிண்டர் விலை ரூ.499.51 பைசாவிலிருந்து ரூ.502.40 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவும், டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததாலும் இந்த விலை  உயர்த்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.  

இதன்படி மானிய சிலிண்டர் விலைக்கான மானியம் பெறும் மக்களின் வங்கிக்கணக்கில் இனிமேல், ரூ.376 சிலிண்டர் ஒன்றுக்கு அரசு சார்பில் செலுத்தப்படும். இதற்கு முன் ரூ.320.49 காசுகள் செலுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.