டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய நெக்சான் EV மாடல் இந்திய வெளியீடு விரைவில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் EV மாடல் லாங்-ரேன்ஜ் வெர்ஷன் உருவாக்கப்பட்டு வருகிறது. முன்னதாக இந்த மாடல் சாலைகளில் சோதனை செய்யப்படும் விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. புதிய நெக்சான் மாடல் இந்தியாவில் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேம்பட்ட நெக்சான் மாடலின் பேட்டரி அளவில் பெரியதாகவும், மெக்கானிக்கல் அம்சங்களில் மட்டும் சிறு மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது.

மற்றப்படி புதிய நெக்சான் EV தோற்றத்தில் தற்போது விற்பனை செய்யப்படும் மாடலை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. முன்னதாக வெளியான தகவல்களின் படி புதிய நெக்சான் EV மாடலில் 40 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படும் என கூறப்பட்டது. இது தற்போதுள்ள நெக்சான் EV மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் 30.2 கிலோவாட் ஹவர் பேட்டரியை விட 30 சதவீதம் அளவில் பெரியது ஆகும். 

தற்போதைய நெக்சான் EV மாடல் முழு சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. எனினும், பெரிய பேட்டரி பேக் கொண்ட புதிய நெக்சான் EV முழு சார்ஜ் செய்தால் 400-க்கும் அதிக கிலோமீட்டர்கள் செல்லும் என எதிர்பார்க்கலாம். பெரிய பேட்டரி மட்டுமின்றி புதிய நெக்சான் EV மாடலில் சக்திாய்ந்த சார்ஜர் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். 

அந்த வகையில் புதிய மாடலில் 6.6 கிலோ வாட் AC சார்ஜர் வழங்கப்படலாம். தற்போதைய நெக்சான் EV மாடலில் 3.3 கிலோ வாட் AC சாரஜர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சார்ஜர் காரை முழுமையாக சார்ஜ் செய்ய பத்து மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. புதிய சார்ஜர் சார்ஜிங் நேரத்தையும் கணிசமாக குறைக்கும். இதுதவிர 3.3 கிலோ வாட் AC சார்ஜரும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புதிய நெக்சான் EV மாடலில் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக், ரி-ஜெனரேடிவ் பிரேக்கிங், எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி ப்ரோகிராம், புதிய அலாய் வீல் டிசைன் உள்ளிட்டவை வழங்கப்படலாம். இவைதவிர புதிய நெக்சான் EV மாடலில் டிராக்‌ஷன் கண்ட்ரோல் வசதியும் வழங்கப்பட்டால் நன்றாக இருக்கும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். டாடா நெக்சான் EV விலை ரூ. 14.29 லட்சம் என துவங்குகிறது. அந்த வகையில் புதிய மேம்பட்ட மாடலின் விலை சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

டாடா நெக்சான் EV மாடல் இந்திய சந்தையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் மற்றும் எம்.ஜி. ZS EV போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. நெக்சான் EV மாடலுக்கு போட்டியாக எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனமும் புதிய எலெக்ட்ரிக் காரை உருவாக்கி வருகிறது. இந்த மாடல் 2023 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.