ஆதார் - பான் இணைப்பு: வருமான வரித்துறை முக்கிய அறிவிப்பு!
ஆதார் - பான் இணைப்பு தொடர்பான முக்கிய அறிவிப்பை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது
டிடிஎஸ், டிசிஎஸ் வரி அதிகமாக வசூலிக்கப்படுவதை தவிர்க்கும் பொருட்டு, வருகிற 30 ஆம் தேதிக்குள் (மே 30, 2024) ஆதார் - பான் இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வருமான வரித்துறை தனது எக்ஸ் பக்கத்தில், “வரி செலுத்துவோர் உங்கள் பான் எண்ணை ஆதாருடன் மே 31ஆம் தேதிக்கு முன் இணைக்கவும். இதன் மூலம், மார்ச் 31, 2024க்கு முன் செய்த பரிவர்த்தனைகளுக்குச் செயல்படாத பான் எண் காரணமாக, வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 206AA மற்றும் 206CC இன் கீழ் விதிக்கப்படும் அதிக வரி வசூலை நீங்கள் எதிர்கொள்ள மாட்டீர்கள்.” என பதிவிட்டுள்ளது.
ஆதாருடன் இணைக்கப்படாத பான் எண் செயல்படாத பான் எண்ணாக கருதப்படுகிறது. ஆதாருடன் பான் எண்ணை இணைக்கவில்லை என்றால், வரி செலுத்துபவருக்கு அதிகமாக டிடிஎஸ் பிடிக்கப்படுகிறது.
ஆதார் மற்றும் பான் எண்ணை யார் இணைக்க வேண்டும்?
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139AA, ஜூலை 1, 2017 முதல் நிரந்தரக் கணக்கு எண் (பான்) ஒதுக்கப்பட்டு, ஆதார் எண்ணைப் பெறத் தகுதியுடைய ஒவ்வொரு நபரும் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க வேண்டும். ஆதார் - பான் எண்ணை இணைக்கவில்லை என்றால், 2023ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி முதல் பான் எண் செயலிழந்து விடும். இருப்பினும், பான் செயலிழந்ததனால் ஏற்படும் விளைவுகள் விலக்கு அளிக்கப்பட்ட பிரிவின் கீழ் வருபவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு.. ஜூன் முதல் பல்வேறு விதிகள் மாறப்போகுது..
ஆன்லைனில் ஆதாருடன் பான் எண்ணை இணைப்பது எப்படி?
** வருமான வரித்துறை இணையதளமான https://www.incometax.gov.in/iec/foportal -க்கு செல்ல வேண்டும்.
** அதில் Quick Links என்பதற்கு கீழ் உள்ள Link Aadhaar என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
** ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ளபடி ஆதார் எண், பான் எண் மற்றும் பெயரை குறிப்பிடவும்.
** பான் எண், ஆதார் எண், ஆதாரில் உள்ள உங்கள் பெயர் மற்றும் உங்கள் மொபைல் எண் போன்ற விவரங்களை உள்ளிடவும்.
** ஆதாரில் பிறந்த ஆண்டு மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தால் சதுர பெட்டியை டிக் செய்யவும்.
** மேலும் உங்கள் ஆதார் விவரங்களை சரிபார்க்க நீங்கள் ஒப்புக்கொள்ளும் சதுர பெட்டியையும் டிக் செய்யவும்.
** Link Aadhaar என்பதை க்ளிக் செய்யவும்.
** கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும். பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதனை உள்ளிட்டு சரிபார்க்கும் பொத்தானைக் கிளிக் செய்யவும்.
** ரூ.1000 அபராதம் செலுத்திய பின்னரே உங்கள் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளவும்.