lic ipo subcription : lic ipo: எல்ஐசி ஐபிஓவுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 3 மடங்கு ஆதரவு குவிந்துள்ளது. ரூ.21 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு நினைத்தநிலையில், ரூ.43 ஆயிரத்து 933 கோடிக்கு விருப்ப விண்ணப்பங்கள் வந்துள்ளன.
எல்ஐசி ஐபிஓவுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 3 மடங்கு ஆதரவு குவிந்துள்ளது. ரூ.21 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு நினைத்தநிலையில், ரூ.43 ஆயிரத்து 933 கோடிக்கு விருப்ப விண்ணப்பங்கள் வந்துள்ளன.
ஆதரவு குவிந்தது
உள்நாட்டு சில்லரை முதலீட்டாளர்கள், பாலிசிதாரர்கள், எல்ஐசி ஊழியர்கள் ஆகியோர் தரப்பிலிருந்து ஏகோபித்த ஆதரவு குவிந்தது. ஆனால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்நிய முதலீட்டாளர்கள் சர்வதேச காரணிகள், அமெரி்க்க பெடரல் வங்கி வட்டி வீத உயர்வு, ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக பங்கு வாங்குவதில்ஆர்வம் காட்டவில்லை

இதில் எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளைவிட 6 மடங்கு அதிகமாக விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. அதாவது ரூ.12 ஆயிரம் கோடிக்கு கூடுதலாக விண்ணப்பங்கள் வந்துள்ளன.
பாலிசிதாரர்கள், ஊழியர்கள்
எல்ஐசி ஊழியர்கள் தரப்பில் விருப்ப விண்ணப்பங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 4.4 மடங்கு கூடுதலாக வந்துள்ளன. தனிநபர்கள் பிரிவில் அதாவது சில்லரை முதலீட்டாளர்கள் பிரிவில் ஒதுக்கப்பட்ட அளவைவிட 2 மடங்கு, ஏறக்குறைய ரூ.12 ஆயிரத்து 450 கோடிக்கு கூடுதலாக விண்ணப்பங்கள் வந்தன.
உள்நாட்டு அளவில் இதுவரை நடந்த ஐபிஓக்களில் முதல்முறையாக எல்ஐசிக்கு மட்டும் சில்லரை முதலீட்டாளர்கள் 73.30 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதற்கு முன் கடந்த 2008ம் ஆண்டு ரிலையன்ஸ் பவர் நிறுவன பங்கு விற்பனைக்கு 48 லட்சம் பேர் விண்ணப்பித்ததே அதிகபட்சமாகும்.

தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் தரப்பில் 2.83 மடங்கு (ரூ.8,180கோடி) அதிகமாகவும், அதிகமான சொத்து வைத்துள்ள தனிநபர்கள் தரப்பில் 2.91 மடங்கு(ரூ.10,635 கோடி) அதிகமாகவும் விருப்ப விண்ணப்பங்கள் வந்தன. இந்த இரு பிரிவிலும் ரூ.18,815 கோடிக்கு விருப்ப விண்ணப்பங்கள் வந்தன. அந்நிய முதலீட்டாளர்கள் வெறும் ரூ.2300 கோடிக்கு மட்டுமே விருப்ப விண்ணப்பங்களை அனுப்பினர்.
எவ்வளவு விண்ணப்பங்கள்
ஒட்டுமொத்தமாக 16 கோடியே 20 லட்சத்து 78 ஆயிரத்து 67 பங்குகளை வாங்குவதற்கு 47 கோடியே, 83 லட்சத்து67ஆயிரத்து 10 விண்ணப்பங்கள் வந்துள்ளன. மத்திய அரசு தன்னிடம் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 100 சதவீதப் பங்குகளில் 3.5 சதவீதத்தை பொதுச்சந்தையில் விற்று ரூ.21ஆயிரம் கோடி நிதி திரட்ட திட்டமிட்டது. இதன்படி, எல்ஐசி பங்கு விற்பனை கடந்த 2-ம் தேதி ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு நடந்தது. அதன்பின் 4ம் தேதி முதல் (இன்று) 9ம் தேதிவரை பொது முதலீட்டாளர்களுக்கு பங்கு விற்பனை நடந்தது.

ஒட்டுமொத்தமாக 16.27 கோடி பங்குகளுக்கு 47.82 கோடி விண்ணப்பங்கள் அதாவது 2.95 மடங்கு விண்ணப்பம் வந்துள்ளன.
பொது முதலீட்டாளர்களுக்கான பங்கு விற்பனையில் எல்ஐசி ஊழியர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ.45 தள்ளுபடியும், பாலிசிதாரர்களுக்கு ரூ.60 தள்ளுபடியும் தரப்பட்டது.
எப்போது கிடைக்கும்
எல்ஐசி பங்கு ஒன்றின் விலை ரூ.902 முதல் ரூ.949 வரை விற்கப்படுகிறது.இதில் பாலிசிதாரர்கள் மட்டும் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 5 மடங்கு பங்குகளை வாங்க விண்ணப்பித்துள்ளனர். ஊழியர்கள் 3.8 மடங்கு அளவும், சில்லரை முதலீட்டாளர்கள் 1.6 மடங்கும் விண்ணப்பம் செய்துள்ளனர்.

மே 12ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்தவர்களுக்கான பங்குகளை எல்ஐசி நிறுவனம் ஒதுக்கீடு செய்யும். பங்குகளை வாங்க முடியாத முதலீட்டாளர்களுக்கு மே 13ம் தேதிக்குள் பணம் மீண்டும் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்படும். தகுதிவாய்ந்த முதலீட்டாளர்ளுக்கு அவர்களின் டீமேட் கணக்கில் வரும் 16ம் தேதிக்குள் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்டும். வரும் 17ம் தேதி எல்ஐசி நிறுவனம் மும்பை மற்றும் தேசியப்பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும்
