lic ipo news : எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் ஐபிஓ முடிந்தபின் மே 17ம் தேதி பங்குச்சந்தையில் லிஸ்டிங் செய்யப்படும் எனத் தெரிகிறது.
எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் ஐபிஓ முடிந்தபின் மே 17ம் தேதி பங்குச்சந்தையில் லிஸ்டிங் செய்யப்படும் எனத் தெரிகிறது.
3.5% பங்குகள்
மத்திய அரசு தன்னிடம் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளில் 3.5 சதவீத பங்குகள், அதாவது 22.13 கோடி பங்குகளை மட்டும் விற்று ரூ.21 ஆயிரம் கோடி முதலீடு திரட்ட முடிவு செய்துள்ளது.

பங்கு விலை
இந்நிலையில் எல்ஐசி ஐபிஓ எப்போது இருக்கும், ஒரு பங்கின் விலை, தள்ளுபடி போன்றவற்றை முடிவு செய்ய எல்ஐசி நிறுவனத்தின் வாரியக் குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி எல்ஐசியின் ஒரு பங்கின் விலை ரூ.902 முதல் 949 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எல்ஐசி பங்கு விற்பனை ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு மே 2ம் தேதி தொடங்குகிறது. ஆனால் பொதுமக்கள், பாலிசிதாரர்கள், ஊழியர்கள், சில்லரை முதலீட்டாளர்களுக்கான ஐபிஓ விற்பனை மே 4ம்தேதி முதல் 9ம் தேதிவரை நடக்கிறது.
தள்ளுபடி
பாலிசிதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ.60 வரை தள்ளுபடியும், ஊழியர்கள், சில்லரை முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ.40 தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. எல்ஐசி பங்குகளில் 10 சதவீதம் பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, அதாவது 2.21 கோடி பங்குகளும், 15.80 லட்சம் பங்குகள் ஊழியர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒருவர் குறைந்தபட்சம் 15 பங்குகள் வாங்க வேண்டும். 15 பங்குகள் அளவில் எத்தனை மடங்கு வேண்டுமானாலும் அதன்பின் வாங்கலாம்.

ஆங்கர் முதலீட்டாளர்கள்
ஆங்கர் முதலீ்ட்டாளர்களுக்கு 5.92கோடி பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆங்கர் முதலீட்டாளர்கள் மூலம் மத்திய அரசு ரூ.5,630 கோடி நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.
மீதமுள்ள 50 சதவீதப் பங்குகள் அனைத்தும் தகுதியான முதலீட்டாளர்களுக்கும் 35 சதவீதம் சில்லரை முதலீட்டாளர்களுக்கும் 15 சதவீதம் நிறுவனமில்லாத முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கப்பட உள்ளது.
மே 17ம் தேதி லிஸ்டிங்
பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபியிடம் தாக்கல் செய்த ஆவணங்களின்படி மே 4ம் தேதி முதல் 9ம் தேதிவரை ஐபிஓ விற்பனை நடக்கும். அதன்பின், டீமேட் கணக்கு தாரர்களுக்கு பங்கு ஒதுக்கீடு இருக்கும் இந்த நடைமுறைகள் அனைத்தும் மே 16ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, மே 17ம் தேதி பங்குச்சந்தையில் எல்ஐசி பங்குகள் லிஸ்டிங் செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஓவின் தாய்
பங்குச்சந்தையில் ஐபிஓக்களின் தாய் என்று எல்ஐசி நிறுவனத்தின் பங்கு விற்பனை கூறப்படுகிறது. இதுவரை ஐபிஓ மூலம் பேடிஎம் நிறுவனம் அதிகபட்சமாக ரூ.18ஆயிரம் கோடி ஈர்த்துள்ளது, ஆனால், எல்ஐசி நிறுவனப் பங்கு மூலம் ரூ21 ஆயிரம் கோடி ஈட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படுவதால் எல்ஐசி நிறுவனப் பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிட்டபின் அதன் உரிமையாளர்களுக்கு லாபம் கொழிக்கப்போகிறது என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்
