LIC IPO :பொதுத்துறை காப்பீடு நிறுவனமான எல்ஐசியின் ஐபிஓவுக்கு பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி அனுமதியளித்துள்ளது.ஆனால், உக்ரைன்-ரஷ்யா இடையே நடந்து வரும் போர்,சர்வதேச சூழல், கச்சா எண்ணெய் விலை உயர்வு, சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கம் ஆகிய காரணங்களால் பங்கு விற்பனை தள்ளிவைக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுத்துறை காப்பீடு நிறுவனமான எல்ஐசியின் ஐபிஓவுக்கு பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி அனுமதியளித்துள்ளது.
ஆனால், உக்ரைன்-ரஷ்யா இடையே நடந்து வரும் போர்,சர்வதேச சூழல், கச்சா எண்ணெய் விலை உயர்வு, சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கம் ஆகிய காரணங்களால் பங்கு விற்பனை தள்ளிவைக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
5% பங்குகள்
எல்ஐசி நிறுவனத்தில் மத்திய அரசுக்குஇருக்கும் பங்குகளில் 5 சதவீதத்தை, அதாவது 31.60 கோடி பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்ய இருக்கிறது.இதற்கான வரைவு திட்ட அறிக்கையை எல்ஐசி நிறுவனம் ஏற்கெனவே செபியிடம் கடந்த மாதம் 12ம் தேதி தாக்கல் செய்துவிட்டது. அந்த வரைவு அறிக்கைக்கு செபி ஒப்புதல் வழங்கியுள்ளது

31.60 கோடி பங்குகள்
வரைவு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, “ எல்ஐசி நிறுவனம் 31 கோடியே, 62 லட்சத்து 49ஆயிரத்து 885 பங்குகளை விற்பனை செய்ய இருக்கிறது. ஒவ்வொரு பங்கின் முகமதிப்பு ரூ.10 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஒத்திவைப்பு?
எல்ஐசி ஐபிஓவுக்கு செபி அனுமதியளித்துவிட்டாலும், அதன் பங்கு விற்பனை இப்போதைக்கு இருக்காது எனத் தெரிகிறது. பங்குச்சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கமான சூழல், சர்வதேச காரணிகளால் பங்குச்சந்தையில் பங்குகள் பட்டியலிடப்பட்டால், முதலீட்டாளர்களை பெரிதாகஈர்க்காது என்பதால், ஐபிஓ வெளியிடும் தேதி தள்ளிவைக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிதி திரட்டல்
இந்த ஐபிஓ மூலம் மத்திய அரசு ரூ.65 ஆயிரம் முதல் ரூ.75ஆயிரம் கோடிவரை திரட்டி, நிதிப்பற்றாக்குறையைக் குறைகக் திட்டமிட்டது. ஆனால், நடப்பு நிதியாண்டு முடிய இன்னும் 22 நாட்கள் மட்டுமேஇருப்பதால், இந்த தேதிக்குள் ஐபிஓ நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஒருவேளை மார்ச் மாதத்துக்குள் எல்ஐசி ஐபிஓ நடக்காவிட்டால் நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் முதலீட்டு விலக்கல் நிதிதிரட்டல் ரூ.20ஆயிரம் கோடிக்குள்ளாகவே இருக்கும். பங்குவிற்பனை நடந்தால், அதிகபட்சமாக ரூ.90ஆயிரம் கோடிவரை வரலாம்.
சர்வதேச காரணிகள்
மார்ச் மாதத்துக்குள் ஐபிஓ வெளியிட்டு நிதி திரட்ட மத்திய அரசு திட்டவட்டமாக இருந்தது. ஆனால், கடந்த சில வாரங்களுக்குள் பங்குச்சந்தையில் அன்னிய நேரடி முதலீட்டாளர்கள் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வெளியே எடுத்துவிட்டதால், மத்திய அரசு அஞ்சி, ஐபிஓ வெளியீட்டை தள்ளி வைக்க விரும்புகிறது.

சலுகை
இந்த ஐபிஓ விற்பனையில் எல்ஐசி பாலிசிதாரர்கள், ஊழியர்களுக்கு தனிச்சலுகை, தள்ளுபடி வழங்கப்படும் எனத் தெரிகிறது. அதுகுறித்து அதிகாரபூர்வமாக எல்ஐசி சார்பில் இன்னும் தெரிவிக்கவில்லை. மேலும்மூன்றில் ஒருபங்கு பரஸ்பர நிதித்திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய ஐபிஓ
எல்ஐசி ஐபிஓ நடந்தால், பங்குச்சந்தை வரலாற்றிலேயே மிகப்பெரிய ஐபிஓவாகஇருக்கும். பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டால், எல்ஐசி சந்தை மதிப்பு ரிலையன்ஸ், டிசிஎஸ் நிறுவனங்களுக்கும் அதிகமாக மாறும். இதுவரை அதிகபட்சமாக ஐபிஓ மூலம் பேடிஎம் நிறுவனம் ரூ.18,300 கோடி திரட்டியுள்ளது. அதைத்தொடர்ந்து கோல் இந்தியா ரூ.15,500 கோடியும், ரிலையன்ஸ் பவர் ரூ.11,700 கோடியும் திரட்டியுள்ளன
