கடந்த சில நாட்களாக பரபரப்பான செய்தி என்றால் அது திருச்சி லலிதா ஜூவல்லரியில் 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் முகமூடி கொள்ளையர்களால் வாரிச்சுருட்டிய சம்பவம் தான்.  கைவரிசை காட்டியது வடநாட்டுக் கொள்ளையர்களா? இவ்வளவு நகைகளை கொள்ளையடித்ததில் ஜூவல்லரியில் பணியாற்றியவரின் பங்கு உண்டா? என பரபரப்பான தகவல்கள் வந்து கொண்டே இருந்தன. ஆனால் இன்று காலை தமிழகத்தையே பேசுபொருளாக்கியது இந்த கொள்ளைச்சம்பவம். 

காரணம், இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்தனர். குறிப்பாக கொள்ளையில் ஈடுபட்டவர்கள் திருவாரூரை சேர்ந்தவர்கள் என்பது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று நள்ளிரவு முதல் இப்போது வரை இது தான் தமிழகத்தில் ஹாட் டாபிக். செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சிகளும் இந்தச் செய்தி பக்கம் பக்கமாக, நொடிக்கு நொடி வெளிவருகிறது.

அதேவேளை செய்தித் தாள்களில் பக்கம் பக்கமாக லலிதா ஜூவல்லரி உரிமையாளர் கிரண்குமார் போஸ்கொடுத்த விளம்பரங்களும் வெளியாகி இருக்கிறது. தொலைக்காட்சிகளிலும் கிரன்குமாரின் விளம்பரங்கள் கண்சிமிட்டி விட்டு போகின்றன. இன்றைய ஒரு நாள் விளம்பரத்திற்கு மட்டுமே கிரண்குமார் சில கோடிகளை செலவழித்து இருப்பார்.  கொள்ளையர்கள் வாரி வழித்தெடுத்த பிறகும் கோடிக்கணக்கில் விளம்பரம் செய்து வரும் கிரண்குமாரின் செயல் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

பொதுவாக எந்த டிவிசேனல்களிலும், அனைத்து செய்தித்தாள் மற்றும் வாரப் பத்திரிகைகளிலும் சமீபகாலமாக இவருடைய விளம்பரத்தை பார்க்காமல் இருக்க முடியாது அந்த அளவிற்கு கோடிக்கணக்கான பட்ஜெட்டை விளம்பரத்திற்காக ஒதிக்கி அதில் யாரையும் நடிக்க விடாமல் தானே ஹீரோ போன்று அவதாரமெடுத்து தனது நகை கடைக்கான விளம்பர தூதுவராக வளம் வந்தவர்தான் கிரண்குமார். ஆனாலும் இன்றைய விளம்பரம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.