கியா இந்தியா நிறுவனம் தனது கேரன்ஸ் எம்.பி.வி. மாடலின் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.
கொரிய நாட்டை சேர்ந்த கியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது கேரன்ஸ் எம்.பி.வி. மாடலை பிப்ரவரி 15 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. கியா கேரன்ஸ் மாடல் அந்நிறுவனத்தின் செல்டோஸ் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் கியா கேரன்ஸ் மாடலுக்கான முன்பதிவு ஜனவரி 14 ஆம் தேதி துவங்கியது. முன்பதிவு துவங்கிய 24 மணி நேரத்தில் சுமார் 7,700-க்கும் அதிக முன்பதிவுகள் செய்யப்பட்டதாக கியா இந்தியா தெரிவித்து இருந்தது.
இந்திய சந்தையில் கியா நிறுவனத்தின் நான்காவது மாடலாக கேரன்ஸ் எம்.பி.வி. மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மேலும் இந்த மாடல் பிரீமியம், பிரெஸ்டிஜ், பிரெஸ்டிஜ் பிளஸ், லக்சரி மற்றும் லக்சரி பிளஸ் என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கும். இந்த மாடல் 6 சீட்டர் மற்றும் ம7 சீட்டர் என இரண்டு விதமான இருக்கை அமைப்புகளில் கிடைக்கும்.

எஸ்.யு.வி. ஸ்டைலிங்கில் உருவாகி இருக்கும் கேரன்ஸ் எம்.பி.வி. மாடல் இந்த மாதம் அறிமுகமாகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கியா கேரன்ஸ் உலகம் முழுக்க சுமார் 80-க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.
கியா கேரன்ஸ் மாடல் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இவற்றுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், 7 ஸ்பீடு டி.சி.டி. கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.
இதன் டாப் எண்ட் வேரியண்ட் 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் கனெக்டிவிட்டி, ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, 64 நிற ஆம்பியண்ட் லைட்டிங், ஏர் பியூரிஃபையர், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, சன்ரூஃப் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
