சன் டிவி ஊழியர்களை விட கலாநிதி மாறன்-காவேரி கலாநிதி 900 மடங்கு அதிக சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Kalanithi Mara & Kavery Salary! சன் டிவி நெட்வொர்க்கின் தலைவரான கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி கலாநிதி ஆகியோர் இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் உயர் அதிகாரிகள் பட்டியலில் மீண்டும் இடம்பிடித்துள்ளனர். 2025 நிதியாண்டில் சுமார் இருவரும் சுமார் ரூ.175 கோடி கூட்டு ஊதியத்தைப் பெற்றுள்ளனர். அதாவது இருவரும் தலா ரூ.87.50 கோடி பெற்றுள்ளனர். இதில் ரூ.13.87 கோடி சம்பளமாகவும், ரூ.73.63 கோடி எக்ஸ்-கிரேஷியா மற்றும் போனஸாகவும் வழங்கப்பட்டதாகவும் அந்நிறுவனத்தின் நிதியறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கலாநிதி மாறன்-காவேரி சம்பளம்
நாட்டின் கடினமான காலமான கொரோனா பெருந்தொற்று காலம் உள்பட பல ஆண்டுகள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி ஆகியோரின் ரூ.175 கோடியாக நிலையாக உள்ளது. இவர்களின் மகளும், ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபத் அணியை நிர்வகிப்பவருமான காவியா கலாநிதி மாறனும் ரூ.1.09 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். சம்பளம் மட்டுமின்றி கலாநிதி மாறன் 2025ம் நிதியாண்டில் ரூ.443.35 கோடி ஈவுத்தொகையாகப் பெற்றுள்ளார். இது முந்தைய ஆண்டில் ரூ.406.4 கோடியாக இருந்தது.
ஊழியர்கள் சம்பளத்தை விட 900 மடங்கு அதிகம்
சன் டி.வி.யில் 75% பங்குகளை வைத்திருப்பதால், முந்தைய நிதியாண்டில் நிறுவனத்தின் ₹591.13 கோடி ஈவுத்தொகையில் நான்கில் மூன்று பங்கு இவருக்குச் சென்றுள்ளது. சன் டிவியின் ஆண் ஊழியர்களுக்கான சராசரி ஊதியம் ரூ.514,658 ஆக இருந்தது. இது கலாநிதி மாறன், காவேரி கலாநிதி, இயக்குநர் குழு மற்றும் முக்கிய நிர்வாக அதிகாரிகளின் ஊதியத்தை விட கிட்டத்தட்ட 909 மடங்கு குறைவு என தகவல்கள் கூறுகின்றன.
கலாநிதி மாறன்-தயாநிதி மாறன் பிரச்சனை
இதற்கிடையே கலாநிதி மாறனுக்கும், அவரது சகோதரரும், திமுக எம்.பி.யு.மான தயாநிதி மாறனுக்கும் இடையே சிறு உரசல் ஏற்பட்டது. தயாநிதி மாறன், தனது மூத்த சகோதரருக்கு ஒரு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பினார். அதில் நியாயமான மதிப்பீடு அல்லது பங்குதாரர்களின் ஒப்புதல் இல்லாமல் சன் டி.வி.யின் 1.2 மில்லியன் பங்குகள் முறையாக ஒதுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்த நிலையில், பின்பு பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட்டது.
மற்ற நிறுவன உயர் அதிகாரிகளின் சம்பளம்
இந்தியாவின் பிற நிறுவங்களின் முக்கிய நிர்வாகிகளின் சம்பளத்தை விட கலாநிதி மாறன்-காவேரி சம்பளம் அதிகமாக உள்ளது. பர்சிஸ்டென்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் சந்தீப் கல்ரா ரூ.148.09 கோடி பெற்று தனிநபர் அதிகாரிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பவன் முஞ்சல் ₹109.41 கோடி பெற்றுள்ளார். பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் ராஜீவ் ஜெயின், பங்கு சார்ந்த போனஸ் (ESOPs) மூலம் ₹80 கோடி உட்பட, ₹102.10 கோடி ஈட்டி, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ₹100 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளார்.
