ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் இனிமேல் தவறான எண்ணுக்கு ரீசார்ஜ் செய்தாலும், அந்தப் பணத்தைத் திரும்பப் பெறலாம். MyJio ஆப் மூலமாக, குறிப்பிட்ட நேரத்திற்குள் ரீஃபண்ட் கோர முடியும். இந்த புதிய வசதியை எப்படி பயன்படுத்துவது என்று இங்கே பார்க்கலாம்.

அவசரத்தில் ரீசார்ஜ் செய்யும்போது, நம்பர் மாறிப்போவது நம்மில் பலருக்கும் நடக்கும் ஒரு பொதுவான தவறு. குறிப்பாக, அதிக தொகைக்கு ரீசார்ஜ் செய்யும்போது, 'ஐயையோ, பணம் போச்சே' என்று மனதுக்குக் கஷ்டமாக இருக்கும். தவறான எண்ணுக்கு ரீசார்ஜ் செய்தால், அந்தப் பணமும் போச்சு, சேவையும் கிடைக்காது என்ற நிலைதான் இதுவரை இருந்தது. ஆனால், இந்தப் பிரச்சினைக்கு ரிலையன்ஸ் ஜியோ ஒரு நிரந்தர தீர்வைக் கொண்டு வந்துள்ளது. தவறான எண்ணுக்கு ரீசார்ஜ் செய்தாலும், நீங்கள் செலுத்திய பணத்தை ரீஃபண்டாகப் பெற முடியும் என்று ஜியோ அறிவித்துள்ளது. ஜியோ வாடிக்கையாளர்கள் MyJio ஆப் மூலம், குறிப்பிட்ட நேரத்திற்குள் ரீஃபண்ட் பெறும் நடவடிக்கைகளைத் தொடங்கலாம். இனி தவறாக ரீசார்ஜ் செய்யப்பட்ட எண்ணின் உரிமையாளரைத் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை என்று ஜியோ தெளிவுபடுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஜியோவில் தவறான ரீசார்ஜ்... பணத்தை திரும்பப் பெறுவது எப்படி?

இந்த புதிய ரீஃபண்ட் வசதி, உங்கள் மொபைல் போன் அல்லது மற்ற சாதனங்களில் உள்ள MyJio ஆப் மூலம் செய்யப்படும் ரீசார்ஜ்களுக்கு மட்டுமே கிடைக்கும். நீங்கள் Paytm அல்லது PhonePe போன்ற மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் ரீசார்ஜ் செய்திருந்தால், இந்த வசதியைப் பயன்படுத்த முடியாது. முக்கியமாக, ரீசார்ஜ் செய்த மூன்று மணி நேரத்திற்குள் ரீஃபண்ட் கோரிக்கையை அனுப்ப வேண்டும் என்றும் ஜியோ தெரிவித்துள்ளது. ரீஃபண்ட் பெற நீங்கள் செய்ய வேண்டியவை இதோ...

முதலில் MyJio செயலியைத் திறந்து லாகின் செய்யுங்கள்.

உங்கள் 'Transaction History' பகுதிக்குச் செல்லுங்கள்.

உங்கள் சமீபத்திய பரிவர்த்தனைகளில், தவறாக செய்த ரீசார்ஜைக் கண்டறியுங்கள்.

“பிளானை ரத்து செய்” (Cancel Plan) என்ற ஆப்ஷனைத் தட்டவும். இந்த ஆப்ஷன், ரீசார்ஜ் செய்த சில மணி நேரங்களுக்கு மட்டுமே திரையில் தெரியும்.

நீங்கள் ஏன் ரத்து செய்கிறீர்கள் என்பதற்கான சரியான காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்களுக்கு ரீஃபண்ட் எப்படி வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்.