ஜாகுவார் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கென புதிய பிளாட்ஃபார்ம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

ஜாகுவார் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் வாகன பிளாட்ஃபார்ம் அந்நிறுவனத்தாலேயே உருவாக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. 2025 முதல் ஜாகுவார் லேண்ட் ரோவர் அனைத்து வாகனங்களையும் எலெக்ட்ரிக் மயமாக்கும் திட்டம் பற்றியும் அந்நிறுவனம் அறிவித்து உள்ளது.

ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெய்ரி பலோர் ஜாகுவார் எலெக்ட்ரிக் கார்களுக்கான எலெக்ட்ரிக் வாகன பிளாட்ஃபார்ம் வெளியில் இருந்து வாங்கப்படும் என தெரிவித்து இருந்தார். எனினும், தற்போதைய அறிவிப்பின் படி ஜாகுவார் தனது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கென சொந்தமாக எலெக்ட்ரிக் வாகன பிளாட்ஃபார்ம் ஒன்றை உருவாக்கி வருகிறது. 

மற்ற கார் உற்பத்தியாளர்களால் வழங்க முடியாத வகையில் டிசைன் மற்றும் திறன் ஒருங்கினைந்த பிளாட்ஃபார்ம் ஒன்றே ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களுக்கு தேவை. "புதிய ஜாகுவாரை பொருத்தவரை, நாங்கள் முற்றிலும் பிரத்யேக பங்கு வகிப்பதை முக்கியத்துவம் வாய்ந்ததாகக பார்க்கிறோம். இதன் காரணமாகவே நாங்களே இதை செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறோம்," என பலோர் தெரிவித்தார். 

மூத்த நிதி அலுவலர் அட்ரியன் மார்டெல், "புதிய பிளாட்ஃபார்ம் பேந்தியரா என அழைக்கப்படுகிறது." என தெரிவித்தார். பேந்தியரா என்பது சிறுத்தைப்புலி, புலி, சிங்கம் மற்றும் சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளின் அறிவியல்பூர்வ பெயர் ஆகும். விலை அடிப்படையில் ஜாகுவார் பிராண்டை பெண்ட்லிக்கு இணையாக கொண்டு செல்ல ஜாகுவார் லேண்ட் ரோவர் முடிவு செய்துள்ளது. இத்தகைய நேரத்தில் சொந்த பிளாட்ஃபார்ம் இருந்தால் தான், பிரத்யேக கார் மாடல்களை உருவாக்க முடியும். 

ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் முழுமையான எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையில் கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது. ஏற்கனவே ஜாகுவார் லேண்ட் ரோவர் அறிமுகம் தெய்த ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் மாடல் டிசம்பர் 31, 2021 வரை நிறைவுற்ற நிதியாண்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் மூன்று சதவீத பங்குகளை பெற்றது. 

இந்தியாவில் ஜாகுவார் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலான ஐ-பேஸ் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து எஃப்-பேஸ் எஸ்.யு.வி. ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.