வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்த பிறகு, ரீஃபண்ட் பொதுவாக 3-4 வாரங்களில் கிடைக்கும். ரீஃபண்ட் தாமதமாக இ-சரிபார்ப்பு செய்யாதது, தவறான வங்கி விவரங்கள், அல்லது வரித்துறை நோட்டீஸ் போன்ற காரணங்கள் இருக்கலாம்.

வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யும் காலக்கெடு கடந்துவிட்டது. பலர் ஏற்கனவே தங்கள் ஐடிஆர்-ஐ தாக்கல் செய்து முடித்துள்ளனர். ரிட்டன் தாக்கலுக்கு பிறகு, வரி செலுத்துவோரின் முக்கிய எதிர்பார்ப்பு ரீஃபண்ட்தான். “எப்போது அந்த பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்?” என்பதே அனைவருக்கும் வரும் கேள்வி.

வருமான வரி விதிகளின்படி, ITR தாக்கல் செய்யப்பட்ட பிறகு பொதுவாக 3 முதல் 4 வாரங்களுக்குள் ரீஃபண்ட் வழங்கப்படும். அந்த இடைப்பட்ட காலத்தில், வருமான வரித்துறை பிரிவு 143(1)ன் கீழ் தாக்கல்களை சரிபார்க்கும். குறைந்த தொகை ரீஃபண்ட் விரைவாக வர வாய்ப்பு உண்டு. ஆனால் அதிக தொகைக்கு கூடுதல் நேரம் எடுக்கப்படும்.

அதே நேரத்தில், ரீஃபண்ட் தாமதமாக வருவதற்கும், வராமலும் போவதற்கும் சில காரணங்கள் இருக்கலாம். உதாரணமாக, தாக்கலின் போது இ-சரிபார்ப்பு (மின் சரிபார்ப்பு) செய்யாமல் விட்டால், ரீஃபண்ட் நிலுவையில் இருக்கும். தவறான வங்கி விவரங்கள் கொடுத்தாலோ, அல்லது ரிட்டனில் பிழைகள் இருந்தாலோ கூட, ரீஃபண்ட் நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது.

மேலும், சில நேரங்களில் வருமான வரித்துறை கூடுதல் தகவல், தேவைப்பட்டால் நோட்டீஸ் அனுப்பலாம். அந்த நிலையில், தேவையான ஆவணங்களை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் ரீஃபண்ட் இன்னும் தாமதமாகும்.

ரீஃபண்ட் நிலையை தெரிந்து கொள்ளுங்கள், வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழையலாம். உங்கள் PAN எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். அதற்கு PAN-ஆதார் இணைப்பு செய்யப்பட வேண்டும். உள்நுழைந்த பிறகு, 'ரிட்டர்ன்' என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து, சமர்ப்பித்துள்ள ரிட்டன் விவரங்களைப் பார்க்கலாம். அங்கு உங்கள் ரீஃபண்ட் நிலை தெளிவாகக் காணலாம்.

எனவே, ITR தாக்கல் செய்தவர்கள் அமைதியாக 3 முதல் 4 வாரங்கள் காத்திருக்க வேண்டும். அதற்குப் பிறகும் ரீஃபண்ட் வரவில்லை என்றால், வங்கி விவரங்கள் சரியாக உள்ளனவா, இ-சரிபார்ப்பு முடிந்துள்ளதா, அல்லது வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதா என்று சரிபார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.