interest decresed small savings

சிறுசேமிப்பு திட்டங்களான பி.பி.எப்., கிஷான் விகாஷ் பத்திரம் மற்றும் சுகன்யா சம்ரிதி திட்டம் ஆகியவற்றுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டுகளில் வட்டி 0.1 சதவீதத்தை குறைத்து மத்தியஅரசு இன்று அறிவிப்பு வெளியி்ட்டுள்ளது.

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான சிறுசேமிப்பு திட்டங்களுக்கான டெபாசிட் வட்டியை ஒப்பிடும்போது, இது மிகக்குறைவாகும். அதேசமயம், சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி ஆண்டுக்கு 4 சதவீதம் தொடர்கிறது.

சிறுசேமிப்புகளுக்கான வட்டி ஒவ்வொரு காலாண்டுக்கு ஒருமுறையும் மாற்றி அமைக்கப்படும் முறை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்டது. அதன்படி இப்போது வட்டிவீதம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, “ பி.பி.எப். சேமிப்பு திட்டத்துக்கு ஆண்டு வட்டி 7.9 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 8சதவீதம் வட்டி வழங்கப்பட்டது.

112 மாதங்கள் டெபாசிட்களாக வைக்கக்கூடிய கிசான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி 7.6 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

பெண் குழந்தைக்கான சேமிப்பு திட்டமான, சுகன்யா சம்ரிதி சேமிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 8.5 சதவீதம் வழங்கப்பட்டு வந்த வட்டி, 8.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு கணக்கின் மீதான வட்டி 8.4 சதவீதமாகத் தொடர்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.