indigo :மாற்றுத்திறனாளி சிறப்புக் குழந்தையை நடத்திய விதத்துக்காக இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட நிகழ்வு, எங்களுக்கு ஒரு பாடம் என்று அந்த நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளி சிறப்புக் குழந்தையை நடத்திய விதத்துக்காக இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட நிகழ்வு, எங்களுக்கு ஒரு பாடம் என்று அந்த நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளி குழந்தை
கடந்த மே 7ம் தேதி ராஞ்சி விமானநிலையத்தில் ராஞ்சி-ஹைதராபாத்துக்கு இன்டிகோ விமானநிறுவனத்தின் விமானம் புறப்பட இருந்தது. அப்போது மாற்றுத்திறனாளி சிறப்பு சிறுவனை அழைத்துக் கொண்டு பெற்றோர் வந்தனர். நீண்டநேர கார் பயணத்தில் வந்ததால் சிறுவனுக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து, விமானநிலையத்தில் அந்தச் சிறுவனுக்கு முறையான உணவும், அன்பாக கவனிப்பையும் பெற்றோர் அளித்ததையடுத்து, சிறுவன் இயல்புநிலைக்கு வந்தார்.

அனுமதி மறுப்பு
ஆனால், விமானத்தில் ஏறுவதற்கு முன் இன்டிகோ விமானத்தின் மேலாளர், சிறுவன் இயல்புநிலைக்கு வந்தால்தான் விமானத்தில் அனுமதிப்பேன் இல்லாவிட்டால் அனுமதிக்க முடியாது என்று எச்சரித்துள்ளார்.
இந்த சிறுவனை விமானத்தில் அனுமதித்தால் மற்ற பயணிகளுக்கும் அசவுகரிகக் குறைவு ஏற்படு்ம் என்று சிறுவனின் பெற்றோரின்மனதை வேதனைப்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சிறுவனின் உடல்நிலையை மதுபோதைக்கு அடிமையானவர்களுடன் ஒப்பிட்டு பேசி அவர்களை அவமதித்துள்ளார்.
விசாரணை
இதைப் பார்த்த மற்ற பயணிகள் மேலாளர் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டித்துள்ளனர். ஆனால், இன்டிகோ மேலாளர் அதைக் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார். இதைப் பார்த்த சக பயணி அபினந்தன் மிஸ்ரா என்பவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் வைரலாகியதையடுத்து, இன்டிகோ விமானநிறுவனத்திடம் டிஜிசிஏ விளக்கம் கேட்டது. மேலும், 3 அதிகாரிகளை கடந்த 9ம் தேதி நியமித்து இந்த சம்பவத்தை விசாரிக்க உத்தரவிட்டது.

அபராதம்
இந்த விசாரணையின் முடிவில், இன்டிகோ நிறுவனத்தின் ஊழியர்கள் அந்த சிறுவனை நடத்தியவிதம் தவறானது என்பது தெரியவந்தது. இதையடுத்து, இன்டிகோ நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து, டிஜிசிஏ உத்தரட்டது.
அனுபவ பாடம்
இந்த சம்பவம் குறித்து இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரோனோஜாய் தத்தா கூறுகையில் “ மாற்றுத்திறனாளி சிறப்புக் குழந்தை விஷயத்தில் எங்களுக்கு டிஜிசிஏ விதித்த அபராதத்தை எதிர்த்து நாங்கள்மேல் முறையீடு செய்யமாட்டோம். அந்த சம்பவம் எங்களுக்கு ஒரு பாடம்.
மாற்றுத்திறனாளி குழந்தைகள் விஷயத்தில் எங்கள் ஊழியர்கள் நடந்து கொண்ட பக்குவம் போதாது. இ்ந்த சம்பவத்தின் மூலம் இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் இதுபோன்ற உணர்வுப்பூர்வமான விஷயத்தை அனுகுவதற்கு இன்னும் பயிற்சி தேவை என்பதை சுட்டிக்காட்டுகிறது. அதைக் கற்றுக்கொள்ள இந்த சம்பவம் வாய்ப்பளிக்கிறது” எனத் தெரிவித்தார்
