இந்தியா-பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்ததை அடுத்து, பங்குச் சந்தை உயர்வைச் சந்தித்தது. குறிப்பாக, டாப் 10 நிறுவனங்களின் பங்குகள் உச்சத்தைத் தொட்டன.

இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் முடிந்த நிலையில் இந்த பத்து பங்குகள் உச்சத்தை தொட்டன. அவை எவை என்று பார்க்கலாம்.

இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் ஏன்?

இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த ஏழாம் தேதி அதிகாலை முதல் முப்படைகள் ரீதியிலான மோதல் வெடித்து வந்தது. இந்த மோதலால் சந்தையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. ஆனால், நிப்டி முதலீட்டாளர்களுக்கு ஆறுதலாக 24,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகம் செய்தது. முன்னதாக ஏப்ரல் 2ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகளின் மீது வரிகளை சுமத்தினார். அப்போது பங்குச் சந்தை மிகவும் இறக்கத்துடன் காணப்பட்டது. ஆனால், அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் சதவீதம் ஜிடிபி-யில் வெறும் இரண்டு சதவீதம் என்று தெரிய வந்த பின்னர், சந்தை தன்னைத் தானே சரி செய்து கொண்டது. இந்த நிலையில் தான் காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருந்தனர். இதற்குப் பின்னர் பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருக்கும் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்தியாவின் முப்படைகளும் பயங்கரமான தாக்குதல்களை நடத்தி இருந்தது.

ரிலையன்ஸ் பங்குகளின் மதிப்பும், மூலதனமும்:

இதைதொடர்ந்து இந்திய பங்குச் சந்தை சரிய தொடங்கியது. ஆனாலும், அவ்வப்போது சரி செய்து கொண்டது. முதலீட்டாளர்களுக்கு நிப்டி ஆறுதல் அளித்தது. இந்தியாவின் பிரபலமான அதிக மதிப்புள்ள கொண்ட நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், 3.14 சதவீதம் உயர்ந்து ரூ.1,421 ஆக உள்ளது. இந்த மட்டும் இந்தப் பங்கு தனது மூலதனத்தில் ரூ.58,527.94 கோடியைச் சேர்த்தது. அடுத்தது, HDFC வங்கி, அதன் சந்தை மூலதனத்தில் ரூ.42,986.15 கோடியைச் சேர்த்தது.

இன்றைய வர்த்தகத்தில், அதிக சந்தை மூலதனத்தைக் கொண்ட இந்தியாவின் முதல் 10 பாகுபலி நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்பட்டன. இதனால் முக்கிய பங்கு குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை தலா 2.5 சதவீதம் உயர்ந்தன. இந்தியா - பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்து இருக்கும் நிலையில் இன்று பங்குச் சந்தையும் உயர்ந்து காணப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் கோடியை குவித்த பங்குகள்:

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் 10 நிறுவனங்கள் 2,38,000 கோடிக்கு மேல் சேர்த்தன. அவற்றின் மொத்த சொத்து மதிப்பு 2.5 சதவீதமாக அதிகரித்து ரூ.95,37,008 லட்சம் கோடியிலிருந்து ரூ.97,75,098 லட்சம் கோடியாக உயர்ந்தது. முதல் மூன்று பங்குகள் மட்டும் ரூ.1,30 லட்சம் கோடியை சந்தை மூலதனத்தில் சேர்த்ததாக BSE தரவு காட்டுகிறது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று உயர்ந்து காணப்பட்ட பாகுபலி பங்குகள்:

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.14 சதவீதம் உயர்ந்து ரூ.1,421 ஆகவும், ஹெச்டிஎஃப்சி வங்கி 2.97 சதவீதம் அதிகரித்து ரூ.1,945.35 ஆகவும் உயர்ந்துள்ளது. ஐடி நிறுவனமான டிசிஎஸ் அதன் சந்தை மதிப்பில் ரூ.28,799.97 கோடியைச் சேர்த்தது. டிசிஎஸ் பங்கு மதிப்பு ரூ.3,529 ஆக உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையில் முதல் 10 நிறுவனங்களில், ஐசிஐசிஐ வங்கி தனது மூலதனத்தில் ரூ.10 லட்சம் கோடியை (ரூ.10,19,030.68 கோடி) தாண்டியது. இன்போசிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், எஸ்பிஐ ஆகியவை சந்தை மூலதனத்தில் ரூ.13,000-19,000 கோடியைச் சேர்த்தன. எஃப்எம்சிஜி நிறுவனங்களான ஐடிசி மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவை தலா ரூ.10,000 கோடி சந்தை மதிப்பைச் சேர்த்தன. பார்தி ஏர்டெல் சந்தை மூலதனத்தில் ரூ.8,400 கோடி அதிகரித்தது.

முதலீட்டார்களுக்கு ரூ.11.32 லட்சம் கோடி லாபம்:

இந்திய முக்கிய குறியீடுகள் திங்கட்கிழமை கடுமையாக உயர்ந்தன. பிஎஸ்இ-பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் ரூ.427.84 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஏனெனில் முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளில் ரூ.11.32 லட்சம் கோடியைச் சேர்த்தனர். இது முந்தைய முடிவான ரூ.416.52 கோடியுடன் ஒப்பிடும்போது அதிகமாகும்.

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ஞாயிற்றுக் கிழமை இரவில் இருந்து அமைதி நிலவி வருவதால், பங்குச் சந்தை அதை பிரதிபலித்துள்ளது. காளையும் ஓட்டம் பிடித்து முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.