ஓமிக்ரான் அச்சம் உலக அளவில் பெரும் பொருளாதார சிக்கலை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இன்றைய இந்திய பங்கு வர்த்தகத்தில் அது பெருமளவில் எதிரொலித்தது.
ஒமைக்ரான் வைரஸ் உலக அளவில் வேகமாகப் பரவி வருகிறது. அதனால் ஏற்பட்டுள்ள அச்ச உணர்வு மற்றும் பொருளாதார மந்த நிலை பங்குச்சந்தைகளில் இன்று பெருமளவில் எதிரொலித்தது. இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தக தொடக்கத்திலிருந்தே கடும் சரிவை சந்தித்தன. இன்று ஒரேநாளில் மட்டும் ரூ.9 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது. டெல்டா வைரஸை விட ஓமிக்ரான் வகை வைரஸ் வேகமாக பரவுவதால் மீண்டும் லாக்டவுன் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் வரலாம் என்று தெரிகிறது. இதனால் தொழில்துறையில் மறுபடியும் ஒரு சுணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் இது கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வர்த்தக வாரத்தின் முதல்நாளான இன்றே இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1028.61 புள்ளிகள் சரிந்து 55,983.13 எனவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 307.50 புள்ளிகள் சரிந்து 16,677.70 ஆகவும் வர்த்தகத்தை துவங்கின. உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு, ஒமைக்ரான் அச்சுறுத்தல், சீனா கடன் வட்டி விகிதங்களை குறைத்தது, முன்னணி நிறுவனங்கள் பங்குகள் சரிவு, லாக்டவுன் அச்சம் காரணமாக முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது உள்ளிட்ட பல காரணங்களால் இன்றைய வர்த்தகம் நாள் முழுக்க அதிக சரிவிலேயே வர்த்தகமாகின. மதியம் 3 மணியளவில் 1849 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்தது. கடந்த ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் இன்றைய வர்த்தகத்தில் ஏற்படும் மாபெரும் சரிவு இதுவே. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 1,189.73 புள்ளிகள் சரிந்து 55,822.01ஆகவும், நிப்டி 371 புள்ளிகள் சரிந்து 16,614.20ஆகவும் நிறைவடைந்தன. இன்றைய ஒரே நாளில் இந்திய பங்கு சந்தைகளில் 9,000 கோடி ரூபாய் அளவிற்கான வர்த்தக நஷ்டம் ஏற்பட்டுள்ளது கவலையளிப்பதாக உள்ளது.
