இறக்குமதி வரியை ரத்து செய்ய இதை செய்யுங்கள் என டெஸ்லா நிறுவனத்திற்கு மத்திய அரசு வலியுறுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த எலெக்ட்ரிக் கார் உற்பத்தியாளரான டெஸ்லா இந்தியாவில் தனது வியாபாரத்தை நீட்டிக்க கடந்த சில ஆண்டுகளாக திட்டமிட்டு வருகிறது. எனினும், மத்திய அரசு அதிக இறக்குமதி வரி விதிப்பதால், டெஸ்லாவின் இந்திய வருகை தொடர்ந்து தாமதமாகி வருகிறது. இதையொட்டி டெஸ்லா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகப்படுத்த இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறது.

இந்த நிலையில், இறக்குமதி வரியை ரத்து செய்ய டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் 500 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆட்டோ உபகரணங்களை உற்பத்தி செய்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் உபகரணங்கள் உற்பத்தியை மிக குறைந்த எண்ணிக்கையில் இருந்த தொடங்கவும் அரசு அனுமதி அளிப்பதாக கூறப்படுகிறது.

ஒரு வருடத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை உபகரணங்களை ஏற்றுமதி செய்ய வேண்டும். ஏற்கனவே உள்நாட்டு உற்பத்தியை வேகப்படுத்த மத்திய அரசு டெஸ்லாவிடம் தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது. எனினும், மத்திய அரசின் புது முடிவுக்கு டெஸ்லா தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் இருந்து 100 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான உபகரணங்களை உற்பத்தி செய்வதாக அறிவித்து இருந்தது.

முதற்கட்டமாக எலெக்ட்ரிக் கார்களை CBU மாடல்களாக இறக்குமதி செய்ய டெஸ்லா முடிவு செய்துள்ளது. எனினும், இவ்வாறு செய்யும் போது கார் மாடல்களின் விலை கணிசமாக அதிகரிக்கும். இதன் காரணமாக டெஸ்லா மத்திய அரசிடம் இறக்குமதி வரியை குறைக்க கோரிக்கை விடுத்து வருகிறது. எனினும், டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி ஆலையை துவங்கி தனது எலெக்ட்ரிக் கார்களை இங்கு உருவாக்க மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்தியாவில் உற்பத்தியை துவங்கும் முன் இங்கு வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள டெஸ்லா முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக டெஸ்லா மற்றும் மத்திய அரசிடையே சமரசமற்ற சூழல் காரணமாக டெஸ்லாவின் வருகை தாமதமாகி வருகிறது. இந்தியாவில் அதிக இறக்குமதி வரி வசூலிக்கப்படுவதாக டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் ஏற்கனவே அதிருப்தி தெரிவித்து இருந்தார்.