narendra modi: காங் ஆட்சிபோல் அல்ல; ஒவ்வொரு பைசாவும் பயனாளிகளுக்கு சேர்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்
narendra modi : காங்கிரஸ் ஆட்சியைப் போல் அல்லாமல் மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில் ஒவ்வொரு பைசாவும் வீணாகாமல் பயனாளிகளுக்கு சென்று சேர்கிறது என்று பிரதமர் மோடி பெருமிதம்
காங்கிரஸ் ஆட்சியைப் போல் அல்லாமல் மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில் ஒவ்வொரு பைசாவும் வீணாகாமல் பயனாளிகளுக்கு சென்று சேர்கிறது என்று பிரதமர் மோடி பெருமிதம்
குஜராத் மாநிலத்துக்கு பிரதமர் மோடி 3 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள பனாஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தியாதர் பகுதியில் ரூ.600 கோடியில் கட்டப்பட்ட பனாஸ் டெய்ரி பால் பதப்படுத்தும் மையம், உருளைக்கிழங்கு பதப்படுத்தும் மையம் ஆகியவற்றை மோடி திறந்துவைத்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
இதற்கு முன் மத்தியில் ஆட்சியில் இருந்த பிரதமர் ஒருமுறை கூறுகையில், ஒரு ரூபாயை பயனாளிக்கு செலவிட்டால் அதில் 15 பைசாதான் சென்று சேர்கிறது என்றார். ஆனால், அவர் சென்றபின் மத்தியில் பாஜக ஆட்சிக்குவந்தபின், 100 பைசாவும் பயனாளிக்கு வீணாகாமல் சேர்கிறது, அவர்களின் வங்கிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படுகிறது.
சிறுவிவசாயிகள், பெண்கள் இணைந்த பால்கூட்டுறவு கிராமப்புறப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும். உலகிலேயே இந்தியாதான் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இருக்கிறது. கோடிக்கணக்கான விவசாயிகள் பால் தொழிலை நம்பியுள்ளனர். ஆண்டுக்கு இந்தியா ரூ.8.50 லட்சம் கோடிக்கு பால் உற்பத்தி செய்கிறது. புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள்கூட இதை கவனிக்கத் தவறினர்.
கோதுமை, அரிசியின் விற்றுமுதல் ரூ.8.50 லட்சம் கோடிகூட வரவில்லை. சிறுவிவசாயிகள்தான் பால்வளத்துறையில் மிகப்பெரிய பயனாளிகள். இந்த அரசு எப்போதுமே விவசாயிகள் மீது அக்கறையாகஇருக்கிறது, குறிப்பாக சிறுவிவசாயிகள் நலன் மீது கவனமாக இருக்கிறது
நான் டெல்லிக்குச் சென்றபின், நாடுமுழுவதும் உள்ள சிறுவிவசாயிகள் குறித்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். இன்று ஆண்டுக்கு 3 முறை விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.2 ஆயிரம் சேர்க்கப்படுகிறது.ஒரு கிராமத்தின் பொருளாதாரம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு பனாஸ் கூட்டுறவு பால்பண்ணை மிகப்பெரிய உதாரணம். ஆத்மநிர்பாரத் திட்டத்தை இது வலுப்படுத்துகிறது
பனாஸ்கந்தாவில் உள்ள பெண்கள் தங்களின் பிள்ளைகளைவிட மிகுந்த அக்கறையாக கால்நடைகளைக் கவனிக்கிறார்கள். பனாஸ் டெய்ரி பண்ணை மூலம் நாடுமுழுவதும் ஏராளமான பயோ சிஎன்ஜி மற்றும் கோபல் வாயு உற்பத்தி மையத்தை உருவாக்க முடியும். கழிவுகளை செல்வங்களாக மாற்றுவோம் என்பதற்கு உதாரணமாக பனாஸ்டெய்ரி இருக்கிறது
கால்நடைகளின் கழிவுகள் மூலம் பலவிதமான இலக்குகள் எட்டப்பட்டுள்ளன. கிராமத்தை சுத்தமாக வைக்க முடியும், கால்நடைகளின் கழிவுகளில் இருந்து விவசாயிகள் பணமும் ஈட்ட முடியும். 3-வதாக கழிவுகள் மூலம் பயோ-சிஎன்ஜி வாயு,மின்சாரமும் எடுக்கமுடியும். இயற்கை உரம் தயாரிக்க முடியும்
பனாஸ்டெய்ரி உபி, ஹரியானா, ராஜஸ்தான், ஒடிசா, ஆந்திரா, ஜார்க்கணட் மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தி பலன்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார் பனாஸ் டெய்ரியில் தினசரி 30 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்த முடியும், 80 டன் வெண்ணெய், ஒரு லட்சம் லிட்டர் ஐஸ்க்ரீம், 20டன் பாலாடை, 6 டன் சாக்லேட் தினசரி தயாரிக்க முடியும்
உருளைக்கிழமை பதப்படுத்தும் ஆலையில் பிரெஞ்சு பிரைஸ், சிப்ஸ், ஆலு டிக்கி, உள்ளிட்ட பல்வேறு வகைகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படஉள்ளது.