2045க்குள் இந்தியாவின் எரிசக்தி தேவை இருமடங்கு உயரும்: பிரதமர் மோடி கருத்து
கோவாவில் பிப்ரவரி 6 முதல் 9 வரை நடக்கும் இரண்டாவது இந்திய எரிசக்தி வார விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்துப் பேசினார்.
கோவாவில் எரிசக்தி வாரவிழா நிகழ்வுகளைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி இந்தியாவின் எரிசக்தி தேவை இரண்டு மடங்காக உயரும் என்று கூறியுள்ளார்.
கோவாவில் பிப்ரவரி 6 முதல் 9 வரை இரண்டாவது இந்திய எரிசக்தி வார விழா நடைபெறுகிறது. இந்தியா மற்றும் உலகின் பிற நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, எரிசக்தித் துறையில் அடுத்த 5-6 ஆண்டுகளில் அதிக முதலீடுகளை எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
"இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என உலகம் முழுவதும் உள்ள வல்லுநர்கள் நம்புகிறார்கள். இந்தியாவின் இந்த வளர்ச்சிக் கதையில் எரிசக்தி துறை முக்கியமானது" என்றார். இந்தியா ஏற்கனவே உலகின் மூன்றாவது பெரிய எரிசக்தி நுகர்வு நாடாக உள்ளது. எல்.பி.ஜி. நுகர்வில் மூன்றாவது இடத்திலும், எல்.என்.ஜி. இறக்குமதி, எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ஆட்டோமொபைல் சந்தையில் உலகின் நான்காவது இடத்திலும் உள்ளது என பிரதமர் சுட்டிக்காட்டினார்.
விண்வெளியில் ஒரு அற்புதம்! பூமியும் சந்திரனும் அருகருகே இருக்கும் அரிய புகைப்படம்!
"இன்று இந்தியாவில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் விற்பனையில் புதிய சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. மின்சார வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் இந்தியாவின் முதன்மை எரிசக்தி தேவை 2045க்குள் இரட்டிப்பாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது" என்று பிரதமர் கூறினார்.
வீட்டில் சோலார் மின்தகடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை மின் அமைப்புகள் மூலம் பெற்று விநியோகிப்படும் என்றும் பிரதமர் கூறினார். 1 கோடி சோலார் கூரை இணைப்புகள் மூலம், குடும்பங்கள் விரைவில் மின்சாரத் தேவையில் தன்னிறைவு பெறும் எனவும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
லிபியா, நைஜீரியா மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெட்ரோலியத்துறை அமைச்சர்களும், கானா, ஜிபூட்டி மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் எரிசக்தித்துறை அமைச்சர்களும் இந்த விழாவில் உரையாற்ற உள்ளனர்.
எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கான அமைப்பான OPEC இன் பொதுச்செயலாளர் ஹைதன் அல் கைஸ் இதில் கலந்துகொள்கிறார். பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மாநாட்டின் அமர்வுகளுக்கு தலைமை தாங்க உள்ளார்.