2024-25 நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியாவின் நிகர வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) கணிசமாகக் குறைந்துள்ளது. IPO சந்தை சூடுபிடித்ததால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்று வெளியேறியதே இதற்கு காரணம்.

வெளிநாட்டு நேரடி முதலீடு சரிவு

2024-25 நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியாவின் நிகர வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) கணிசமாகக் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி (RBI) தனது புள்ளிவிவரங்களில் தெரிவித்துள்ளது. நிகர FDI வெறும் 353 மில்லியன் டாலர்களாகக் குறைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைந்தபட்ச முதலீடாகும். கடந்த 2023-24 நிதியாண்டில் இது 10 பில்லியன் டாலர்களாக இருந்தது.

வெளியேறிய முதலீட்டாளர்கள்

இந்தியப் பங்குச் சந்தையில் IPO சந்தை சூடுபிடித்ததே இந்த முதலீட்டுக் குறைவுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. IPOகள் அதிகரித்ததால், ஆல்ஃபா வேவ் குளோபல், பார்ட்னர்ஸ் குரூப் போன்ற நீண்டகால வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்று வெளியேறினர். ஹூண்டாய் மோட்டார், ஸ்விக்கி போன்ற நிறுவனங்களில் தங்கள் பங்குகளை விற்று, பில்லியன் கணக்கான டாலர்களை லாபமாக எடுத்துச் சென்றுள்ளனர்.

அதேபோல், இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்வதும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை எளிதாகத் திரும்பப் பெறுவதும் இந்தச் சரிவுக்குக் காரணமாக அமைந்துள்ளன. நடப்பு நிதியாண்டில் வெளிநாடுகளுக்குத் திரும்ப அனுப்பப்பட்ட முதலீடு 49 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் 41 பில்லியன் டாலர்களை விட அதிகம்.

இந்த சரிவிற்கு முக்கிய காரணமாக, முதலீட்டாளர்கள் லாபகரமான முதற்கட்ட பங்கு வெளியீடுகள் (IPOs) மூலமாக வெளியேறி பெரிய அளவில் நிதிகளை மீட்டெடுத்ததையும், இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டில் முதலீடுகளை அதிகரித்ததையும் ரிசர்வ் வங்கி (RBI) தனது வெளியிட்ட மாதாந்திர அறிவிப்பில் கூறியுள்ளது.

இந்தியாவுக்கு சதகமான அம்சமா?

இருப்பினும் அந்நிய முதலீடுகள் குறைந்திருப்பது இந்தியாவுக்கு நல்லதல்ல. இதனால் வேலை வாய்ப்புகள் புதியதாக உருவாகாது. அதேபோல, இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்திக்கும். பெட்ரோல், டீசல், செல்போன், இதர எலக்ட்ரானிக் பொருட்களுக்கான விலையும் உயரும். பங்கு சந்தை சரிவடையும். புதிய தொழில்கள் வளர்ச்சி அடைய முடியாது. இதெல்லாம் சேர்ந்து பொருளாதார வளர்ச்சியை மந்தமாக்கி, GDPயை குறைத்துவிடும். 

இந்தியாவில் அந்நிய முதலீடுகள் குறைந்ததற்கு காரணம் அமெரிக்காவின் வரி கொள்கைதான். மெக்சிகோ, கனடா மற்றும் சீனாவுக்கு அமெரிக்க விதித்த கூடுதல் வரி காரணமாக, அமெரிக்காவுக்குள் முதலீடு செய்ய பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். எனவேதான் இந்தியாவில் முதலீடு குறைந்திருக்கிறது. டிரம்ப் பார்த்த வேலைதான் இதற்கு காரணம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தப் புள்ளிவிவரங்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை சற்றுக் குறைந்துள்ளதைக் காட்டுகின்றன. எதிர்காலத்தில் இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகள் எவ்வாறு மேம்படுத்தப்படும் என்பது முக்கியமானதாகும்.