வெளிநாடுகளில் இருந்து ஏசி இறக்குமதி செய்ய மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. உள்நாட்டு தயாரிப்புகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை குறைத்து, உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில், கார்கள், பேருந்துகள், லாரிகள் மற்றும் இருசக்கர வாகனம் பயன்படுத்தப்படும் சில புதிய நியூமேடிக் டயர்களை இறக்குமதி செய்வதற்கு அரசு தடை விதித்தது. அதற்கு முன்னர் டிவி முதல் பாதுகாப்பு உபகரணங்கள் வரை பல்வேறு பொருட்களுக்கான இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது. அடுத்தகட்டமாக, ஏசி மற்றும் அதன் பாகங்களை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகளை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து ஏசி இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்காக இறக்குமதி கொள்கையில் செய்யப்பட்ட மாற்றம் குறித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் தெரிவித்துள்ளது. ஏசி மற்றும் அசெம்பிள் செய்யப்படும் பொருட்கள் பெரும்பாலும் சீனா மற்றும் தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாகல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை குறைக்கவும் அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.