ஹீரோ எலெக்ட்ரிக் மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகி இருக்கும் முதல் எலெக்ட்ரிக் வாகனம் வெளியிடப்பட்டது.

ஹீரோ எலெக்ட்ரிக் மற்றும் மஹிந்திரா குழுமம் இணைந்து தங்களின் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்தன. எலெக்ட்ரிக் வாகனங்கள் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இரு நிறுவனங்கள் கூட்டணி அமைத்த நிலையில், பிதாம்பூர் ஆலையில் இருந்து ஆப்டிமா மாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இரு நிறுவனங்கள் இடையே ரூ. 150 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

"மஹிந்திரா குழுமத்துடனான ஒப்பந்தத்தின் படி எங்களின் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் - ஆப்டிமா ஸ்கூட்டரை பிதாம்பூர் ஆலையில் இருந்து வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்," என ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் அக்கவுண்டில் பதிவிட்டு இருக்கிறது.

மஹிந்திரா நிறுவனத்துடனான கூட்டணியை பயன்படுத்தி ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் பத்து லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. வாகனங்கள் உற்பத்தி மட்டுமின்றி மஹிந்திரா நிறுவனத்தின் பியூஜியோட் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு எலெக்ட்ரிக் திறன் வழங்க மஹிந்திரா நிறுவனத்திற்கு ஹீரோ எலெக்ட்ரிக் உதவ இருக்கிறது.

கூட்டணி மூலம் இரு நிறுவனங்களும் செலிவீனங்களை கட்டுப்படுத்துவது, நேரத்தை மிச்சப்படுத்துவது, அசுர வேகத்தில் வளர்ந்து வரும் சர்வதேச எலெக்ட்ரிக் வாகன சூழலில் அறிவுசார் பங்களிப்புகளை பகிர்ந்து கொள்வது என பலவிதங்களில் சமஅளவில் பயன்பெற முடிவு செய்துள்ளன.

"இரு முன்னணி நிறுவனங்கள் இணைந்து வளர்ந்து வரும் தேவைகளை எதிர்கொள்ள உற்பத்தி திறனை மேம்படுத்துவது, நாட்டின் பல பகுதிகளில் கால்பதிக்க மஹிந்திராவின் தலைசிறந்த விற்பனை மையங்களை பயன்படுத்திக் கொள்ள இருக்கிறோம். நீண்ட கால கூட்டணி மூலம் அடுத்த சில ஆண்டுகளில் புதிய வாகனங்கள் வளர்ச்சிக்கு இரு நிறுவனங்களின் அதீத அனுபவத்தை பகிர்ந்து கொள்ள இருக்கிறோம். வரும் காலங்களில் அவர்களுடன் இணைந்து பயணிப்பதில் ஆர்வமாக உள்ளோம்," என கூட்டணி அறிவிப்பின் போது ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நவீன் முஞ்சல் கடந்த மாதம் தெரிவித்தார்.