ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம். 

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் புதிய ஹீரோ எடி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் குறைந்த தொலைவில் அடிக்கடிய பயணம் செய்வோருக்காக உருவாக்கப்பட்டு உள்ளது. எளிய பயன்பாடு வழங்கும் இந்த ஸ்கூட்டர் பயன்படுத்த ஓட்டுனர் உரிமம் அவசியம் இல்லை. மேலும் இந்த ஸ்கூட்டரை பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. எனினும், இந்த ஸ்கூட்டரில் ஏராளமான பயனுள்ள அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

குறைந்த தூரம் பயணிப்பதற்கான ஸ்கூட்டர் என அறிவிக்கப்பட்டு இருந்தாலும், இந்த ஸ்கூட்டரின் உண்மையான ரேன்ஜ் எவ்வளவு தூரம் என்பதை ஹீரோ எலெக்ட்ரிக் அறிவிக்கவில்லை. இந்த ஸ்கூட்டரில் ஃபைண்ட் மை பைக், இ லாக், பெரிய பூட் ஸ்பேஸ், ஃபாலோ மி ஹெட்லேம்ப்கள் மற்றும் ரிவர்ஸ் மோட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் எல்லோ மற்றும் லைட் புளூ என இருவித நிறங்களில் கிடைக்கிறது.

இந்திய சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளராக ஹீரோ எலெக்ட்ரிக் இருக்கிறது. சமீபத்தில் லூதியானாவில் உள்ள தனது ஆலையில் உற்பத்தி பணிகளை அதிகப்படுத்த இருப்பதாக ஹீரோ எலெக்ட்ரிக் அறிவித்தது. தற்போது நாடு முழுக்க 750 விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களை இயக்கி வருகிறது. விற்பனையில் இதுவரை 4.5 லட்சத்திற்கும் அதிக யூனிட்களை ஹீரோ எலெக்ட்ரிக் கடந்துள்ளது.

"ஹீரோ எடி மாடலை அறிமுகம் செய்வதில் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறோம். பல்வேறு ஸ்மார்ட் அம்சங்கள் மற்றும் ஸ்டைலிஷ் லுக்கில் புதிய ஹீரோ எடி விற்பனையில் அமோக வரவேற்பை பெறும். ஒவ்வொருத்தின் தேவையை மனதில் வைத்து இந்த ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டு இருக்கிறது. சவுகரியம் மற்றும் தேவையை பூர்த்தி செய்வதில் ஹீரோ எடி நிச்சயம் தலைசிறந்த மாற்றாக அமையும் என நம்பிக்கை உள்ளது," என ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவன நிர்வாக இயக்குனர் நவீன் முஞ்சல் தெரிவித்தார்.