குறைந்த விலை பங்குகளில் முதலீடு செய்வதன் ஆபத்துகள் மற்றும் சந்தை சதிகள் பற்றி இந்தக் கட்டுரை விளக்குகிறது. பைசா பங்குகளின் மதிப்பு, அவற்றின் திரவத்தன்மை பிரச்சினைகள் மற்றும் நீண்டகால முதலீட்டிற்கான சிறந்த மாற்றுகள் ஆகியவை இதில் அடங்கும்.

சந்தைக்கு புதுசா நீங்க.! இதை தெரிஞ்சுக்குங்க.!

பங்கு சந்தை இன்று பலருக்கும் செல்வத்தை உருவாக்கும் மிக முக்கியமான வழியாக மாறியுள்ளது. குறிப்பாக இளைய தலைமுறையினர் அல்லது முதலீட்டில் புதிதாக ஈடுபடும் நபர்கள், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் எதிர்பார்த்து பங்குச் சந்தைக்கு வருகிறார்கள். அவர்களுக்குத் தங்கள் கண்களில் முதலில் பட்டுப்பிடிப்பது – ரூ.1 அல்லது ரூ.2 போன்ற குறைந்த விலையிலான பங்குகள். 10,000 ரூபாய் போட்டா 10,000 பங்குகள்! பங்கு ரூ.5 ஆனா ரூ.50,000 கிடைக்கும் என்ற கணக்குகளில் கனவுகள் எழுகிறது. ஆனால் இந்த கணக்குகள் வாழ்க்கையில் எவ்வளவு நிஜமாகும்? அந்தப் பங்குகள் உண்மையில் மதிப்புள்ளவையா?

Penny Stocks எனும் பைசா ஷேர்

ரூ.1 மதிப்புள்ள பங்குகள் பெரும்பாலும் பைசா ஷேர் (Penny Stocks) எனப்படும் வகையை சேர்ந்தவை. இவை ரூ.10-க்கும் குறைவாக சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் பங்குகள். பெரும்பாலும் இவை சிறிய, நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்குச் சேர்ந்தவை. பொதுவாக இந்நிறுவனங்களுக்கு வருமானம் உறுதி இல்லை, வளர்ச்சி பாதை தெளிவாக இல்லை, அல்லது மேலாண்மை நம்பகமற்றதாக இருக்கலாம். சில நேரங்களில் கூட அது ஒரு இயங்காத அல்லது தடைசெய்யப்பட்ட நிறுவனமாக இருக்க கூடும். இவை அனைத்தும் ஒரு பங்கின் விலை ஏன் ரூ.1 என்று இருக்கிறது என்பதை விளக்கும் முக்கிய காரணிகள்.

தவறான நம்பிக்கைகளை உருவாக்கும்

இத்தகைய பங்குகளில் முதலீடு செய்வது ஆபத்தானது மட்டுமல்லாமல், தவறான நம்பிக்கைகளை உருவாக்கும். சில முதலீட்டாளர்கள் இந்த பங்குகள் விலை உயரும் என்று நம்பி பொறுமையாக காத்திருப்பார்கள். ஆனால் பங்கு சந்தையில் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு நிதிநிலை, செயல்திறன், எதிர்கால வளர்ச்சி, மொத்த சந்தைப் போக்கு போன்றவை மிக முக்கியமானவை. ரூ.1 பங்கு என்பது விலை குறைவா இருக்கிறதுனால அதுக்குள் அதிக வளர்ச்சி இருக்குமோ? என்ற சந்தேகத்தை தூண்டலாம். ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், விலை குறைவாக இருப்பதற்குக் காரணமே அதன் வளர்ச்சி வாய்ப்புகளின் இல்லாமைதான்.

அதில் முக்கியமானது, இத்தகைய பங்குகளில் 'liquidity' என்ற வர்த்தக நிலைமை மிகவும் குறைவாக இருக்கும். அதாவது நீங்கள் பங்குகளை வாங்கினால் கூட, அதனை விற்கும் நேரத்தில் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் இல்லாமல் போகலாம். இது உங்கள் முதலீட்டை ஒரு நிலைமையற்ற நிலைக்கு கொண்டு செல்லும். நிகரமாகப் பார்த்தால், உங்கள் பணம் காகிதத்தில் மாட்டிக்கொண்டுவிடும். விலை உயர்ந்தாலும், அதை யாரும் வாங்காமல் போனால், நீங்கள் லாபம் எடுக்க முடியாமல் போகலாம்.

சந்தை சதிகள் ஜாக்கிரதை.!

சில சந்தை சதிகள் இந்த வகை பங்குகளில் நடக்கும். ஒரு குழுமம் பங்குகளை செயற்கையாக வாங்கி, அதன் விலையை உயர்த்தி “பம்ப்” செய்கிறது. பிறகு அந்தக் குழு தங்கள் பங்குகளை விற்று வெளியேற, “டம்ப்” நிகழ்கிறது – அந்த நேரம் வரை காத்திருந்த சாதாரண முதலீட்டாளர்கள் நஷ்டத்தில் மூழ்குவார்கள். இதுபோன்ற மோசடியை SEBI போன்ற ஒழுங்குமுறை அமைப்புகள் கண்காணித்து வருகிறாலும், பைசா ஷேர்கள் அதிகமாய் கண்காணிக்கப்படுவது இல்லை என்பதே பிரச்சினை.

அதனால், ரூ.1 மதிப்புள்ள பங்குகளில் முதலீடு செய்வதற்குப் பதிலாக, நிஃப்டி அல்லது சென்செக்ஸ் போன்ற பெரிய பங்குச் சந்தை குறியீட்டு ஃபண்டுகளில் முதலீடு செய்வது நன்மை தரும். அல்லது ப்ளூ-சிப் நிறுவனங்கள் – உதாரணமாக, HDFC, Infosys, TCS போன்ற நிறுவனம் போன்ற நம்பகமான நிறுவனங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பாகும். இவை குறைந்த ஆபத்து மற்றும் நீண்ட கால வருமானத்தை வழங்கும்.

சூதாட்டம் அல்ல சிந்தித்து எடுக்கும் முடிவு

முடிவாக சொல்லவேண்டுமெனில், பங்கு சந்தை என்பது சூதாட்ட அரங்கம் அல்ல. உங்கள் கனவுகளை வளர்த்தெடுக்கும் ஒரு வாய்ப்பு. ஆனால் அந்த வாய்ப்பு வெறும் ரூ.1 என்ற எண்ணிக்கையில் அல்ல, உங்கள் அறிவிலும், ஆராய்ச்சியிலும், பொறுமையிலும் இருக்கிறது. ஒரு பங்கு விலை குறைவாக இருப்பதற்குப் பின்னால் இருக்கும் காரணங்களை புரிந்துகொள்ளாமல் முதலீடு செய்வது, இருளில் கல்லை எறிவதற்குச் சமம்.