அமலாக்கத்துறைக்கு சூப்பர் பவர்! ஜிஎஸ்டி முறைகேடுகளைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டிய நிறுவனங்களின் பட்டியலில் அவ்வப்போது திருத்தம் செய்யப்படுகிறது.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை மற்றும் பொருளாதார நுண்ணறிவுப் பிரிவு ஆகியவற்றுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிறுவனங்களின் பட்டியலில் சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க்கை அரசாங்கம் சேர்த்துள்ளது.
ஜிஎஸ்டி நெட்வொர்க் அரசியலமைப்புச் சட்டத்தின் 66வது பிரிவில் உள்ள பட்டியலில் 26வது அமைப்பாகச் சேர்க்கப்படுவதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதன் மூலம் அமலாக்கத்துறை மற்றும் பொருளாதார நுண்ணறிவுப் பிரிவு ஆகிய விசாரணை நிறுவனங்களின் விசாரணைக்கு தகவல் தேவைப்பட்டால், ஜிஎஸ்டி நெட்வொர்க் அந்தத் தகவல்களை அவர்களிடம் அளிக்க வேண்டும்.
ஜிஎஸ்டி தாக்கல் செய்பவர் ஏதேனும் சந்தேகத்திற்குரிய அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால், அவர் பற்றிய தகவல்களை ஜிஎஸ்டி நெட்வொர்க் அமலாக்கத்துறை மற்றும் பொருளாதார நுண்ணறிவுப் பிரிவுடன் பகிர்ந்துகொள்ளும்.
அமலாக்கத்துறை போலியான ஜிஎஸ்டி பதிவு தொடர்பான வழக்கில் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலர் போலியான பான் கார்டு மற்றும் ஆதார் அட்டைகளை பயன்படுத்தி ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் பதிவு செய்து, பணமோசடி செய்வதற்கான ஷெல் நிறுவனங்களை அமைத்ததாகக் கூறப்படுகிறது.
மத்திய மற்றும் மாநில ஜிஎஸ்டி அதிகாரிகள் 60,000 க்கும் மேற்பட்ட ஜிஎஸ்டி அடையாள எண்களை சரிபார்ப்புக்காக தேர்ந்தெடுத்துள்ளனர். இதில், 50,000க்கும் மேற்பட்ட எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. அவற்றில் 25 சதவீதம் போலியானவை என்று கண்டறிந்த அதிகாரிகள் இதுவரை 11,000 க்கும் மேற்பட்ட ஜிஎஸ்டி அடையாள எண்களை முடக்கியுள்ளனர்.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டிய நிறுவனங்களின் பட்டியலில் அவ்வப்போது திருத்தம் செய்யப்படுகிறது. தற்போது சேர்க்கப்பட்டுள்ள அமலாக்கத்துறை மற்றும் பொருளாதார நுண்ணறிவுப் பிரிவு தவிர இந்திய போட்டி ஆணையம், இந்திய ரிசர்வ் வங்கி, செக்யூரிட்டிகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், தீவிர மோசடி விசாரணை அலுவலகம் மற்றும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் ஜெனரல் ஆகியவைவும் அரசியலமைப்புச் சட்டத்தின் 66வது பிரிவில் உள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ளன.