இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பேடிஎம் செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.  விதிமீறல் காரணமாக பேடிஎம் செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின்  டிஜிட்டல் பணபரிவர்தனை செயலியான பேடிஎம்-ஐ  கோடிக்கணக்கான மக்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சில்லறை கடைகள் முதல் பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை இந்த செயலியை பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில்,  மிகவும் பிரபலமாக இருக்கும் பேடிஎம் செயலியை கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரிலிருந்து நீக்கி உள்ளது. சூதாட்டங்களை ஊக்குவிக்கும் ஆன்லைன் கேசினோக்கள் மற்றும் பிற சூதாட்ட பயன்பாடுகளுக்கு ப்ளே ஸ்டோர் தடை செய்துள்ளது. பேடிஎம் ஆப் ஆன்லைன் விளையாட்டுகளிலும், ஆன்லைன் சூதாட்டங்களிலும் வாடிக்கையாளர்களை பங்குபெறச் செய்ததாக கூகுள் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த தகவலை டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ள 'பேடிஎம்' நிறுவனம், "வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும். தற்காலிகமாக நீக்கப்பட்ட பேடிஎம் செயலி மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் சேர்க்கப்படும்" என்று தெரிவித்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் பேடிஎம் செயலியை புதிதாக டவுன்லோடு செய்யவோ, அப்டேட் செய்யவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.