கொரோனா உலக பொருளாதாரத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கால் தொழில்துறைகள் முடங்கி பொருளாதார சுணக்கம் ஏற்பட்டுள்ள இந்த வேளையில், முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தை நோக்கி திரும்பியிருப்பதால், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துவருகிறது. 

பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் இருந்த முதலீடுகளை மாற்றி தங்கத்தில் முதலீடு செய்துள்ளனர். பாதுகாப்பு கருதி பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. 

தங்கத்தின் விலை ரூ.40 ஆயிரத்தை ஏற்கனவே கடந்துவிட்ட நிலையில், இன்று பிற்பகல் நிலவரப்படி, சவரனுக்கு மேலும் ரூ.304 உயர்ந்ததால்  ஆபரண தங்கத்தின் விலை சவரன் ரூ.40,600ஆக உள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து விண்ணை பிளக்குமளவிற்கு உயர்ந்துவரும் நிலையில், நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் மிரண்டுபோயுள்ளனர். 

அமெரிக்க அதிபர் தேர்தல், கொரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடியான சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவது உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துவருகிறது.