வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கொண்டு வருவதற்கான சுங்க சட்ட விதிகளை இந்த கட்டுரை விவரிக்கிறது. 1 ஆண்டுக்கு மேல் வெளிநாட்டில் தங்கியிருப்போருக்கான வரி இல்லாத தங்க வரம்புகள், கூடுதல் தங்கம் கொண்டு வருவதற்கான கட்டணங்கள்  விளக்கப்பட்டுள்ளன.

யாரும் அறியாத தங்கமலை ரகசியம்

வெளிநாட்டில் இருந்து தங்கம் வாங்கி வரலாமா என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. குறிப்பாக வெளிநாட்டில் வேலை பார்த்து திரும்பும் இந்தியர்கள், தங்கம் எவ்வளவு அளவு கொண்டு வரலாம், அதற்கான சட்டம் என்ன என்பதை அறிந்திருப்பது முக்கியம். சுங்கச் சட்டம், 1962-ன் படி ஒரு ஆண்டுக்கு மேல் வெளிநாட்டில் தங்கி இருக்கும் ஆண்கள் அதிகபட்சம் 20 கிராம் தங்கம் வரை கொண்டு வரலாம். ஆனால் அதன் மதிப்பு 50 ஆயிரம் ரூபாயைத் தாண்டக்கூடாது. பெண்களுக்கு சற்றே கூடுதலாக அனுமதி உண்டு. அவர்கள் 40 கிராம் வரை தங்கத்தை கொண்டு வரலாம். ஆனால் அதன் மொத்த மதிப்பு 1 லட்ச ரூபாயை தாண்டக்கூடாது.

இப்போதைய தங்க விலை உயர்வை கருத்தில் கொண்டால், இந்த அளவு மிகக் குறைவாகிவிடுகிறது. நடைமுறையில் பார்த்தால் ஆண்கள் சுமார் 5 கிராம் மட்டுமே, பெண்கள் சுமார் 10 கிராம் மட்டுமே 22 காரட் தங்கத்தை வரம்பிற்குள் கொண்டு வர முடிகிறது. இதற்கும் மேலான அளவு தங்கத்தை கொண்டு வர விரும்பினால், அதற்கான தனி விதிகள் உள்ளன. வெளிநாட்டில் குறைந்தது ஆறு மாதங்களுக்கு மேல் தங்கி இருந்தவர்கள், 10 கிலோ வரை தங்கத்தை கொண்டு வரலாம். ஆனால் இதற்கு சுங்கவரி கட்டணம் கட்ட வேண்டும். அதோடு அந்த காலகட்டத்தில் இந்தியாவில் 30 நாட்களுக்கு மேல் தங்கி இருக்கக் கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் தங்கம் கொண்டு வருபவர்கள் ‘ரெட் சேனல்’ வழியே செல்ல வேண்டும். அப்போது ஃபார்ம்-1 மூலம் தங்கத்தின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் அல்லது ‘அதிதி’ ஆப் மூலம் முன்பே தகவல் கொடுக்கலாம். இதை செய்யாதவர்களின் தங்கம் பறிமுதல் செய்யப்படும் அபாயமும், கூடுதலாக அபராதமும் விதிக்கப்படும்.

அதே சமயம், தனிப்பட்ட பயன்பாட்டுக்காக அணிந்து வரும் தங்க நகைகளுக்கு எந்த வித சுங்கவரி இல்லை. ஆனால், “தனிப்பட்ட பயன்பாடு” என்றால் என்ன என்பதற்கான தெளிவை சுங்கத் துறை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எனவே விதிமுறைகளை பின்பற்றி வெளிநாட்டில் இருந்து தங்கம் கொண்டு வந்தால் எந்த சிக்கலும் ஏற்படாது.