நடப்பு நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் வேளாண் துறையை ஊக்குவிப்பதற்காக 16 அம்ச திட்டங்களை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். குறிப்பாக பெண்களை விவசாயத்தில் ஈடுபடுத்தி ஊக்குவிப்பதற்காக தான்ய லக்‌ஷ்மி என்ற திட்டத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

2020-21ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு  2.83 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை கடந்த பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு ஒதுக்கீடு செய்த தொகையை விட 12 ஆயிரத்து 955 கோடி ரூபாய் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.  நாட்டின் வேளாண் துறை செழித்தால் மட்டுமே மற்ற துறைகளில் வளர்ச்சி காண முடியும் என்பதை உணர்ந்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, விவசாயிகளுக்கு என பல திட்டங்களை அறிவித்துள்ளது. 

ஒரு மாவட்டம் - ஒரு உற்பத்தி என்கிற அடிப்படையில் தோட்டக்கலைத்துறையில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், 15 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு விவசாயக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 

ஏற்கனவே நபார் வங்கி மூலமாக வழங்கப்பட்டு வரும் மறு நிதி உதவித் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும்,  20 லட்சம் விவசாயிகளுக்கு சோலார் பம்புகளை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசின் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்தார். 

மேலும் விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்ட் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். விவசாயத்திற்கு கடன் வழங்கி உதவினால் மட்டும் போதுமா விளை பொருட்களை உரிய நேரத்திற்கு, உரிய இடத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டாமா?... 


அதனால் தான் 2020-2021ம் ஆண்டிற்கான மத்திய மத்திய பட்ஜெட்டில், காய்கறி, பழங்கள், பால் போன்றவற்றை விமானம் மூலம் கொண்டு செல்ல கிருஷி உடான் என்ற திட்டமும், ரயில் மூலம் கொண்டு செல்ல கிஷான் ரயில் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.