ஸ்டேட் வங்கி மேலும் 2 ஆண்டுகளுக்கு வீட்டு கடன் மற்றும் சில்லரை கடன்களை திருப்பி செலுத்துவதற்கு அவகாசம் கொடுத்துள்ளது.

இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக வங்கிகள், கடன் தவணையை செலுத்த ஆறு மாத கால அவகாசம் வழங்கியது. இதனால், ஆறு மாதத்திற்கு கடன் தவணை செலுத்த தேவையில்லை. ஆனால், இதற்கான வட்டியுடன் சேர்த்து கடன் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ, கடன் தவணை செலுத்துவதை இரண்டு ஆண்டுகள் வரை தள்ளி வைக்கலாம் என்று அறிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களையும் தனது இணையதளத்தில் எஸ்.பி.ஐ வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்டேட் வங்கி நிர்வாக இயக்குனர் சி.எஸ்.ஷெட்டி கூறுகையில், ’’கொரோனா ஊரடங்கின் காரணமாக பொதுமக்களின் வருவாய் குறைந்து வங்கிக்கு கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை உள்ளது. சிறுகடனுதவி பெற்று தொழில் செய்யக்கூடியவர்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டுக் கடன் பெற்றவர்கள் மாத தவணை செலுத்த முடியாத நிலை உள்ளது. அதனால், மேலும் 2 ஆண்டுகளுக்கு கடனை திரும்ப செலுத்த வாடிக்கையாளர்களுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது’’எனத் தெரிவித்துள்ளார்.

மார்ச் 1 ஆம் தேதிக்கு முன்பாக கடன் பெற்றவர்கள் இந்த கடன் சலுகையை பெற தகுதி பெற்றவர்கள். இவர்கள் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு வரை கடன் தவணைகளை தாமதம் இன்றி செலுத்தியிருந்தால் அவர்கள் இந்த சலுகையை பெற தகுதியானவர்கள். மேலும் கொரோனா ஊரடங்கால், ஏற்பட்ட வருவாய் இழப்புக்கான ஆதாரங்களையும் சமர்பிக்க வேண்டும் என்பதும் முக்கியம்.