தொழிலாளர்களின் எதிர்கால நிதி பாதுகாப்பிற்கான பிஎஃப் திட்டம், ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டுத் திட்டங்களையும் உள்ளடக்கியது. இணையம் இல்லாமலேயே எஸ்எம்எஸ் அல்லது மிஸ்டு கால் மூலம் உங்கள் பிஎஃப் நிலுவைத் தொகையை எளிதில் தெரிந்துகொள்ளலாம்.

EPF - Employees’ Provident Fund: இது தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் குடும்பத்து மிகவும் தேவையான நிதி. இது அரசு ஊழியர்களோ, தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களோ இல்லாமல் பெரும்பாலான நிறுவனங்களில் பணியாற்றும் அனைவருக்குமான கட்டாயமான ஓர் சேமிப்பு திட்டமாகும்.

பிஎஃப் என்றால் என்ன?

பிஎஃப் (EPF) என்பது தொழிலாளர்களுக்கான ஓர் முக்கியமான சேமிப்பு திட்டமாகும். இது Employees’ Provident Fund Organisation (EPFO) எனும் மத்திய அரசு அமைப்பின் கீழ் இயங்குகிறது. இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ஊழியர்கள் இந்த திட்டத்தின் கீழ் நிதியைச் சேமித்து வருகின்றனர். இந்த திட்டம், தொழிலாளர்கள் ஓய்வு பெறும் காலத்திலும் நிதி குறைவின்றி வாழ உதவுகின்ற ஒரு பாதுகாப்பு திட்டமாக செயல்படுகிறது.

எப்போது தொடங்கப்பட்டது தெரியுமா?

இந்த திட்டம் முதலில் 1952ஆம் ஆண்டு, "Employees’ Provident Funds and Miscellaneous Provisions Act, 1952" என்ற சட்டத்தின் கீழ் மத்திய அரசு சார்பாக தொடங்கப்பட்டது. இதன் நோக்கம், தனியார் மற்றும் அரசு ஒப்பந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் வருங்கால நலனுக்காக ஒரு நிதி பாதுகாப்பு நிலை ஏற்படுத்துவதே ஆகும். EPFO அமைப்பானது இந்தியாவில் மிகப்பெரிய சமூக பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்தியா முழுவதும் சுமார் 28.3 கோடி பேர் EPFO-வில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் 6.2 கோடி பேர் (62 மில்லியன்) தற்போது செயல்பாட்டிலுள்ள (active) உறுப்பினர்கள் ஆக உள்ளனர். இதுவே இந்த திட்டத்தின் பரவலையும், அதன் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையையும் காட்டுகிறது.

தமிழகத்தில் 40 லட்சம் பேர் உறுப்பினர்கள்

தமிழ்நாடு மாநிலத்தில் மட்டும் சுமார் 35 லட்சம் முதல் 40 லட்சம் வரை உறுப்பினர்கள் உள்ளனர். இது தேசிய அளவில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் மாநிலங்களில் ஒன்றாகும். முக்கிய தொழிற்சாலைகள், ஆட்டோமொபைல், ஐடி நிறுவனங்கள், மற்றும் துணிநூல் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ள தமிழ்நாடு, EPFO திட்டத்தின் கீழ் மிகுந்த பங்களிப்பு செய்யும் மாநிலமாக விளங்குகிறது. பிஎஃப் திட்டத்தின் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெற முடிகிறது. ஒவ்வொரு ஊழியரும் அவருடைய ஊதியத்தில் 12% பங்கு செலுத்த வேண்டும். அதேபோல், நிறுவனமும் அதே அளவு பங்களிக்கிறது. இந்த தொகை ஒரு தனி PF கணக்கில் சேமிக்கப்படுகிறது. இது வரிவிலக்குப் பெறும், பாதுகாப்பான நிதியாகும்.

பாதுகாப்பு அளிக்கும் பிஃஎப்

மேலும், PF கணக்கில் சேமிக்கப்பட்ட தொகையை ஓய்வு பெறும் போது முழுமையாக பெறலாம். குழந்தையின் கல்வி, திருமணம், வீடு கட்டுதல் போன்ற தேவைகளுக்கு மத்தியில் சில நிபந்தனைகளுடன் பகுதி தொகையை முன்பே பெறவும் அனுமதிக்கப்படுகிறது. இது Partial Withdrawal எனப்படுகிறது.

EPF Pension Scheme (EPS) மூலம், 58 வயதுக்கு பிறகு ஓய்வூதியமாக மாதம் மாதம் தொகை பெற முடிகிறது. மேலும், Employees’ Deposit Linked Insurance Scheme (EDLI) மூலம், உறுப்பினர் இறந்தால் அவருடைய குடும்பத்தினர் ₹7 லட்சம் வரை காப்பீடு தொகையை பெற முடியும். இத்தகைய திட்டம் முழுமையாக அரசு மூலம் இயக்கப்படுவதால், நம்பிக்கையும் பாதுகாப்பும் உறுதியாக உள்ளது. இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலில், தனிநபர்களின் எதிர்கால நிதி நிலையை பாதுகாக்க EPF திட்டம் ஒரு இன்றியமையாத கருவியாகும்.இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊழியரும், தனது வேலை வாழ்க்கையின் முடிவில், நிதி சுயாதீனத்துடன் ஓய்வு பெறும் நிலையை அடைய முடியும். இதுவே அதன் சிறப்பும், முக்கியத்துவமுமாகும்.

பிஎஃப் பேலன்ஸ் கண்டுபிடிப்பது எப்படி?

பிஎஃப் பேலன்ஸ் தெரிந்து கொள்ள இணையம் செல்ல தேவையில்லை. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கூட, சில சமயங்களில் இணையம் இல்லாமலோ, ஆப்புகளை பதிவிறக்கம் செய்யவோ வாய்ப்பில்லாமல் இருக்கும். அத்தகைய சூழலில், வெறும் ஒரு எஸ்எம்எஸ் அல்லது மிஸ்டு கால் மூலமாக பிஎஃப் நிலுவைத் தொகையை உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.

எஸ்எம்எஸ் மூலம் PF பேலன்ஸ் தெரிந்துகொள்ள

உங்கள் பிஎஃப் கணக்குடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து, 77382 99899 என்ற EPFO எண்ணிற்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பவும். இதனை தொடர்ந்து உடனடியாக உங்களுடைய கணக்கு விவரங்கள் தெரியவந்துவிடும். ஆங்கிலம் மட்டுல்லாமல், தமிழ்,ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், மராத்தி, தெலுங்கு, மலையாளம், ஒரியா,அசாமிஸ்,பெங்காலி, குஜராத்தி,ஆகிய மொழிகளிலும் உங்கள் போனுக்கு எஸ்எம்எஸ் வரும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் உங்கள் பிஎஃப் கணக்கில் Aadhaar, PAN மற்றும் வங்கி கணக்கு இணைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயம். இல்லையெனில் எஸ்எம்எஸ் மூலம் தகவல் கிடைக்காது.

மிஸ்டு கால் மூலம் PF பேலன்ஸ்

அதேபோல் மிஸ்டு கால் மூலமும் பிஃஎப் பாக்கி இருப்பை தெரிந்துகொள்ள முடியும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து, 99990 44425 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள்.சில விநாடிகளில், உங்கள் PF நிலுவைத் தொகை மற்றும் கடைசியாக செலுத்தப்பட்ட தொகை ஆகியவை பற்றிய எஸ்.எம்.எஸ் கிடைக்கும்.

EPF-ல் பணம் எப்போது பெறலாம்?

20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள நிறுவனங்கள் கட்டாயமாக EPF பதிவு செய்ய வேண்டும். ஊதியம் ₹15,000க்குள் உள்ளோர் கட்டாயமாகச் சேர்க்கப்படுவார்கள்.பணிநிறைவு, ஓய்வு, அல்லது 2 மாத வேலை இழப்பு போன்ற சந்தர்ப்பங்களில் பிஎஃப் பணத்தை திரும்பப் பெறலாம்.

EPF-ல் என்னென்ன பங்களிப்புகள் இருக்கும்?

ஊழியர் ஊதியத்தின் 12% பிஎஃப்-க்குள் செலுத்தப்படுகிறது. நிறுவனமும் அதே அளவு செலுத்தும். இதில் ஒரு பகுதி EPS (ஓய்வூதிய திட்டம்) மற்றும் EDLI (உயிர் காப்பீடு திட்டம்) என்பவற்றுக்கும் செல்கிறது.உங்கள் UAN எண், PAN, மற்றும் Aadhaar ஆகியவற்றை வேறு யாரிடமும் பகிர வேண்டாம்.எப்போதும் EPFO அதிகாரப்பூர்வ சேனல்களையே பயன்படுத்தவும்.இந்த எளிய எஸ்எம்எஸ் மற்றும் மிஸ்டு கால் சேவைகள் மூலம் உங்கள் பிஎஃப் நிலுவைத் தொகையை எளிதில் தெரிந்து கொள்ளலாம். ஆன்லைன் இல்லாத சூழ்நிலையிலும், தொழில்நுட்பம் இல்லாதவர்கள் கூட இந்த சேவைகளை பயன்படுத்தலாம் என்பது மிகப்பெரிய நன்மை. தொழிலாளர்களுக்கான இந்த சேமிப்பு நிதி திட்டம், அவர்களின் எதிர்கால நிதி பாதுகாப்பு தளமாக அமைவதாகும்!