சிங்கப்பூர் ஏர் ஷோவில் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தேஜாஸ் இலகு ரக விமானத்தை இந்தியா காட்சிப்படுத்தியது.

சிங்கப்பூரில் நடைபெறும் விமான கண்காட்சியில் இந்தியா பங்கேற்றுள்ளது. நான்கு நாட்கள் நடைபெறும் ஏர் ஷோ நாளை (பிப்ரவரி 18) நிறைவு பெறுகிறது. சிங்கப்பூர் ஏர் ஷோவின் முதல் நாளிலேயே இந்தியா, முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தேஜாஸ் இலகு ரக விமானத்தை காட்சிப்படுத்தியது. 

பொதுவாக விமான கண்காட்சிகள் வான்வெளியில் பயனர்களை பதற வைக்கும் விமான சாகசங்களுடனேயே நடைபெறும். இது சர்வதேச கண்காட்சி என்பதால் பல நாடுகளை சேர்ந்த போர் விமானங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றன. அந்த வகையில், இந்தியா சார்பில் தேஜாஸ் இலகு ரக விமானம் கலந்து கொண்டது. 

விமான கண்காட்சியின் முதல் நாளிலேயே தேஜாஸ் விமானத்தின் திறனை வெளிப்படுத்தும் சாகசங்களில் சிலவற்றை இந்திய வான்படை வான்வெளியில் செய்து காட்டி அசத்தியது. வான்வெளியில் சட்டென சீறிப்பாய்ந்த தேஜாஸ் காற்றை கிழித்துக் கொண்டு அந்தர் பல்டி, சுழன்று சுழன்று வட்டமடித்தல் என ஏராள சாகசங்களை செய்தது. தேஜாஸ் செய்த மாஸ் ஆக்‌ஷனில் பார்வையாளர்கள் வியப்புடன் கண்டுகளித்தனர். 

இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கும் தேஜாஸ் இலகு ரக விமானத்தை இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் உருவாக்கியது. வான்வழி தாக்குதல்களை எதிர்கொண்டு, பதில் தாக்குதல் செய்வதில் எதிர்தரப்பை கலங்கடிக்கும் வகையில் தேஜாஸ் அதிரடி காட்டும். இவைதவிர கப்பல் தாங்கிய ஏவுகணை தாக்குதல்களை எதிர்கொண்டு பதில் தாக்குதல் நடத்துவதிலும் தேஜாஸ் பட்டையை கிளப்பும்.

முன்னதாக மலேசியாவில் நடைபெற்ற LIMA 2019, துபாய் ஏர் ஷோ உள்ளிட்ட நிகழ்வுகளிலும் இந்திய வான்படை கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறது. 

சிங்கப்பூர் ஏர் ஷோவில் இந்திய வான்படை செய்து காட்டிய சாகசங்கள் அடங்கிய வீடியோவை கீழே காணலாம்..,

YouTube video player