உலகின் அதிவேக ஆம்புலன்ஸ் வாகனம் துபாய் எக்ஸ்போ நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
துபாய் ஆம்புலன்ஸ் சேவை கார்ப்பரேஷன் (DCAS) உலகின் அதிவேக மற்றும் விலை உயர்ந்த ஆம்புலன்ஸ் மாடலை துபாய் எக்ஸ்போ நிகழ்வில் அறிமுகம் செய்து இருக்கிறது." ஹைப்பர்-ஸ்போர்ட் ரெஸ்பாண்டர்" என அழைக்கப்படும் இந்த ஆம்புலன்ஸ் லைக்கன் ஹைப்பர் ஸ்போர்ட் கார் ஆகும். துபாயில் உள்ள W மோட்டார்ஸ் இதனை உருவாக்கி இருக்கிறது.
ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் திரைப்படங்களால் இந்த ஹைப்பர் கார் பிரபலமானது. லைகன் ஹைப்பர் ஸ்போர்ட் மாடல் உலகம் முழுக்க மொத்தத்தில் ஏழு யூனிட்களே உற்பத்தி செய்யப்பட்டன. இந்த காரின் ஒரு யூனிட் விலை இந்திய மதிப்பில் ரூ. 26 கோடி ஆகும். இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.8 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் மணிக்கு 400 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டிருக்கிறது.

இத்தனை பட்ஜெட் கொடுப்பதற்காக இந்த காரின் முன்புற எல்.இ.டி. லைட்களில் 440 வைரங்கள் உள்ளன. இதன் உள்புற மேற்கூரையில் தங்க முலாம் பூசப்பட்டு, கோல்டு ஸ்டிட்ச் லெதர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் உலகிலேயே முதல் முறையாக 3D ஹாலோகிராஃபிகக் மிட்-ஏர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. இதனை மோஷன் ஜெஸ்ட்யூர்களை கொண்டே இயக்க முடியும்.

எடையை வெகுவாக குறைக்கும் நோக்கில், இந்த கார் முழுக்க முழுக்க கார்பன் ஃபைபர் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் டுவின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 3756சிசி இன்லைன் 6 மவுண்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 780 ஹெச்.பி. திறன், 960 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
