கடந்த செப்டம்பர் மாதத்தில் நம் நாட்டில் டீசல் விற்பனை குறைந்துள்ளது. அதேசமயம் பெட்ரோல் விற்பனை அதிகரித்துள்ளது.மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு செல் மாதந்தோறும் நாட்டின் பெட்ரோலிய பயன்பாடு குறித்த புள்ளிவிவரத்தை வெளியிட்டு வருகிறது. 

அந்த வகையில் தற்போது கடந்த செப்டம்பர் மாதத்தின் பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு செல் அறிக்கையின்படி, கடந்த செப்டம்பர் மாதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் விற்பனை 1.60 கோடி டன்னாக குறைந்தது. இது கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவான விற்பனையாகும். 2018 செப்டம்பரில் 1.61 கோடி டன் பெட்ரோலிய பொருட்கள் விற்பனையாகி இருந்தது. 

மொத்த பெட்ரோலிய பொருட்கள் விற்பனையில், டீசல் விற்பனை கடந்த மாதம் 3.2 சதவீதம் குறைந்து 58 லட்சம் டன்னாக குறைந்தது. நாப்தா விற்பனை 8.44 லட்சம் டன்னாகவும், சாலை பணிகளில் பயன்படுத்தப்படும் பிட்மென் பயன்பாடு 7.3 சதவீதம் குறைந்து 3.43 லட்சம் டன்னாகவும் குறைந்தது. அதேசமயம் பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு விற்பனை அதிகரித்துள்ளது. பெட்ரோல் விற்பனை 6 சதவீதம் அதிகரித்து 21.8 லட்சம் டன்னாகவும், சமையல் எரிவாயு பயன்பாடு 6 சதவீதம் அதிகரித்து 21.8 லட்சம் டன்னாகவும் உயர்ந்துள்ளது. 

மண்ணெண்ணெய் பயன்பாடு 38 சதவீதம் குறைந்து 1.76 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. விமான எரிபொருள் பயன்பாடு 1.6 சதவீதம் குறைந்து 6.66 லட்சம் டன்னாக வீழ்ச்சி கண்டுள்ளது. எரிபொருள் ஆயில் விற்பனை 3.8 சதவீதம் குறைந்து 5.25 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது. பெட்ரோலியம் கோக் பயன்பாடு 18 சதவீதம் அதிகரித்து 17.6 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.

பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை குறைந்ததால் அதன் விற்பனை கடந்த செப்டம்பரில் குறைந்துள்ளது. மோசமடைந்து வரும் பொருளாதார பின்னணி மற்றும் வளர்ச்சிக்கான இடர்பாடுகள் அதிகரித்து வருவதன் வெளிப்பாடுதான் பெட்ரோலிய பொருட்கள் விற்பனை சரிவு என முன்னணி ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.