டெபிட் கார்டு மூலம் ஏடிஎம்களில் எடுக்கப்படும் பணத்திற்கு அடுத்த 3 மாதங்களுக்கு எவ்வித சேவை கட்டணமும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

 டெல்லியில் மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் மற்றும் இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது;- தற்போதையை நிலவரம் கவலை அளிக்கிறது. கடந்த 2 மாதமாக தொழில் நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றன. வருமான வரி, ஜிஎஸ்டி தாக்கல் உள்ளிட்டவற்றில் சலுகை அளிக்கப்படும். தொழில்துறையினரின் கருத்துகளை கேட்டறிந்து வருகிறோம். கொரோனா பாதிப்பிற்கான நிவாரண நிதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

2018-19ஆம் நிதியாண்டுக்கான வருமானவரித் தாக்கல் செய்ய ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. தாமதமாக செலுத்தப்படும் வருமானவரி கணக்கிற்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் 12சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாகக் குறைக்கப்படும். ஆதார் கார்டு - பான் கார்டு இணைப்பிற்கான அவகாசம் மார்ச் 31-ல் இருந்து ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், வங்கி சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைக்க வேண்டும் என்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். 3 மாதங்களுக்கு பிற வங்கி ஏடிஎம்களில் கட்டணமில்லாமல் பணம் எடுக்க சலுகை அளிக்கப்படுகிறது. வங்கிகளுக்கு நேரில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும், டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள வேண்டும் என நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.