நிதி சேவைகளில் நாமினியைக் குறிப்பிடுவது கட்டாயம். இறப்புக்குப் பின் சொத்து யாருக்குச் செல்லும் என்பதை நாமினி உறுதி செய்கிறது. நாமினி சொத்தின் உரிமையாளர் அல்ல, டிரஸ்டி போலச் செயல்பட்டு வாரிசுகளுக்குச் சொத்தைக் கொடுக்க வேண்டும்.

நாம் வங்கி சேமிப்புக் கணக்கு தொடங்குகிறோமே அல்லது எதையாவது முதலீடு செய்கிறோமே, அதற்குப் பின்னால் நாமினி என்ற ஒரு முக்கியமான செயல்பாடு இருக்கிறது. ஒருவர் இறந்துபோன பிறகு அவரது சொத்து அல்லது பணம் யாருக்கு செல்லவேண்டும் என்பதை 'நாமினி' குறிக்கும்.

நாமினியின் முக்கியத்துவம்

வங்கி சேமிப்புக் கணக்கு, ஃபிக்ஸட் டெபாசிட், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், டீமேட் கணக்கு, வாழ்க்கை காப்பீடு, பொது காப்பீடு போன்ற எல்லா நிதி தொடர்பான சேவைகளிலும் நாமினியை(Nominee) குறிப்பிடுவது இன்று கட்டாயமாகிவிட்டது. ஏனெனில், முதலீட்டாளர் இறந்துவிட்டால் அந்த சொத்து யாருக்கு சென்று சேரும் என்பது தெளிவாக இருக்க வேண்டும்.

முக்கியக் காரணம்

நாமினி குறிப்பிடப்படாதிருந்தால், அந்தச் சொத்துகள் சட்டப்படி வாரிசுகளுக்குச் செல்வது தான் நடைமுறை. ஆனால் வாரிசுகளுக்குள் குழப்பங்கள், உரிமை சண்டைகள், நேரம் மற்றும் நிதி இழப்புகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

நாமினியின் உரிமைகள் – தவறான நம்பிக்கைகள்

நாமினி என்பவர் சொத்தின் உரிமையாளராகிவிட முடியாது. இவர் ஒரு “டிரஸ்டி” போல நடந்து, அந்த பணம் அல்லது சொத்தை உண்மையான வாரிசுகளுக்குக் கொடுக்க வேண்டிய கடமையுள்ளவர். ஆனால், நடைமுறையில் பலரும் – “நமக்குத்தானே நாமினி பதவியை கொடுத்திருக்கிறார்கள்” என எண்ணி, அந்தச் சொத்தை உரிமையாக எடுத்துக்கொள்வார்கள். இது தவறானதும் சட்டப்படி செல்லாததும் ஆகும்.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

ஒருவர் திருமணத்திற்கு முன்பு எடுத்த லைஃப் இன்சூரன்சில், தன்னுடைய அம்மாவை நாமினியாக நியமித்துள்ளார். கல்யாணத்திற்குப் பிறகு மனைவியும் குழந்தையுமாக வாழ்ந்த நிலையில் அந்த வாடிக்கையாளர் இறுந்து விடுகிறார். இதனை தொடர்ந்து நாமினியாக இருந்த அம்மா, காப்பீடு தொகையை முழுவதும் பெற்றுக்கொண்டு, மருமகளுக்கு கொடுக்க மறுக்கிறார். நீதிமன்ற வழக்கு, சாட்சிகள், கால தாமதம் ஆகியவற்றுக்குப் பிறகு, மருமகளுக்கு ஒரு பகுதி தொகை கிடைத்தது. ஆனால், வாடிக்கையாளர் திருமணத்திற்குப் பிறகு மனைவியை நாமினியாக மாற்றியிருந்தால், இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

மூதாட்டி ஒருவருக்கு மூன்று மகன்கள் இந்த நிலையில், மூத்த குடிமகளாக இருப்பதால், 0.5% கூடுதல் வட்டி கிடைக்கும் என காரணம் கூறி, மூத்த மகன் அவரது பெயரில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்கிறார். பின்னர் நாமினியாக தன்னை நியமிக்கிறார். ஆனால் காமாட்சி இறந்தவுடன் மற்ற இரு மகன்களும் உரிமை கேட்கிறார்கள். வழக்கு நீதிமன்றத்தில் போய், அந்த தொகை மூன்றுபங்காகப் பிரிக்கப்படுகிறது. இங்கு மூத்த மகனுக்கு சுமார் ரூ.3.35 லட்சம்தான் கிடைத்தது. கட்டாயமல்லாத நாமினி அமைப்பு இவருக்குப் பெரிய இழப்பாக மாறியது. இது போன்ற சிக்கள்களை தவிர்க்க நாமினி குறித்த விவரங்களை முழுமையாக தெரிவந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

நாமினியை எப்போது மாற்ற வேண்டும்?

  • திருமணத்துக்குப் பிறகு: தாய்/தந்தையை நாமினியாக வைத்திருந்தால், மாற்றி மனைவி/கணவரை நியமிக்க வேண்டும்.
  • துணைவி மறைந்த பிறகு: பிள்ளைகளில் ஒருவரை நியமிக்கலாம்.
  • பிள்ளைகளுக்கு திருமணம் ஆகிவிட்டால்: மாறிய குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றம் அவசியம்.
  • அடிக்கடி முதலீட்டுப் போதையைப்போல் மாற்றுவது தவறு. ஆனால் தேவையான பொழுது தவறாமல் மாற்றுவது நல்லது.

10 நாமினிகள் யார் நியமிக்கலாம் தெரியுமா?

மியூச்சுவல் ஃபண்ட் விஷயத்தில் முதலீட்டாளர்கள் அதிகபட்சம் 10 நாமினிகளை நியமிக்கலாம். ஒவ்வொருவருக்கும் எத்தனை சதவீதம் பங்கு எனவும் தனித்தனியே குறிப்பிடலாம். நாமினி வேண்டாம் என்றாலும் அதற்கென தனி படிவம் உள்ளது. இது SEBI விதிமுறைகளின் ஒரு பகுதி.

சட்ட ரீதியாக நாமினியின் பங்கு

  1. நாமினி என்பது: சொத்தை 'பெறுபவர்' அல்ல,'இடைக்கால பொறுப்பாளர்' மாதிரியானவர். ஆனால் சொத்து பெறும் உரிமை வாரிசுகளுக்கே என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
  2. நாமினி தேர்வில் கவனிக்க வேண்டியது
  3. நாமினியாக உறவினர் யாரையாவது நியமிக்கும்போது, உண்மையான சொத்து உரிமைதாரருக்கே பணம் சென்று சேரும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
  4. வழக்கில், கணவர் என்றால் மனைவியை, மனைவி என்றால் கணவரை நாமினியாக வைப்பது சிறந்தது.
  5. தகவல்கள் தெளிவாக எழுதப்பட்ட பத்திரங்களாக வைத்துக்கொள்ள வேண்டும்.
  6. ஒரே நபருக்கு சொத்து, காப்பீடு, முதலீடு, வங்கி கணக்கு போன்றவற்றில் முழுமையாக நாமினியாக வைக்காதீர்கள். உண்மை உரிமையாளரைத் தவறவிட வேண்டாம்.

நாமினி என்பது உங்கள் சொத்துக்கு உரிமை உள்ளவராக அல்ல, அவரை சேர்க்கின்ற நோக்கம் உங்கள் குடும்பத்திற்குச் சமநிலை கொண்ட பாதுகாப்பு கொடுக்கவே. இதனை நாம் ஒவ்வொருவரும் சரியாக கணக்கிட்டு செயல்பட்டாலே நம்முடைய சொத்துகள், உழைப்பு தவறான கைகளுக்கு செல்லாமல் பாதுகாக்க முடியும்.