பி.எம்.டபிள்யூ. நிறுவனம் முழுமையான எலெக்ட்ரிக் மினி மாடலை இந்தியாவில் அடுத்த வாரம் அறிமுகம் செய்கிறது.

பி.எம்.டபிள்யூ. இந்தியா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது. முன்னதாக IX எலலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்த பி.எம்.டபிள்யூ. தற்போது ஆல்-எலெக்ட்ரிக் மினி 3-Door கூப்பர் SE மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் மினி 3-Door கூப்பர் SE மாடல் பிப்ரவரி 24 ஆம் தேதி அறிமுகமாகிறது.

எலெக்ட்ரிக் மினி மாடல் ஆடம்பர பிரிவில் மிகவும் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களை குறிவைத்து அறிமுகம் செய்யப்படுகிறது. சமீப காலங்களில் ஆடம்பர எலெக்ட்ரிக் வாகன பிரிவும் மெல்ல வளர்ந்து வருவதை அடுத்து இந்த மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருக்கிறது.

சர்வதேச சந்தையில் இந்த மாடல் 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 32.6 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 270 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் உள்ள மோட்டார் 184 ஹெச்.பி. திறன், 270 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும். 

இந்திய சந்தையில் புதிய மினி 3-Door கூப்பர் SE மாடல் வைட் சில்வர், மிட்நைட் பிளாக், மூன்வாக் கிரே மற்றும் ப்ரிடிஷ் ரேசிங் கிரீன் போன்ற நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. எலெக்ட்ரிக் மினி மாடலில் 17 இன்ச் அலாய் வீல்கள் உள்ளன. இதன் உள்புற கேபினில் 8.8 இன்ச் மெயின் டிஸ்ப்ளே, டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, இருக்கைகளின் மேல் மென்மையான நப்பா லெதர் என ஏராள ஹைலைட்கள் உள்ளன. 

எலெக்ட்ரிக் மினி மாடலுக்கான முன்பதிவு கடந்த ஆண்டு துவங்கியது. முன்பதிவு துவங்கியதும் விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட 30 யூனிட்களும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. இந்தியாவில் அறிமுகமானதும் இந்தியாவில் ஆடம்பர நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கும் குறைந்த விலை எலெக்ட்ரிக் வாகனமாக புதிய மினி 3-Door கூப்பர் SE இருக்கும். இந்த மாடல் CBU முறையில் இந்தியா கொண்டுவரப்படுகிறது. இதன் விலை ரூ. 50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.