பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தமிழக நெடுஞ்சாலையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை அமைத்துள்ளது.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை சென்னை - திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பத்து பெட்ரோல் பங்க்களில் அமைத்துள்ளது. 900 கிலோமீட்டர்கள் நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. 

இந்த நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் அமைந்து இருக்கும் பெட்ரோல் பங்க்களில் பாரத் பெட்ரோலியம் சார்பில் CCS-2 DC ஃபாஸ்ட் சார்ஜர்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த வசதி வழங்கப்பட்டுள்ளதை அடுத்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வசதியான நாட்டின் முதல் நெடுஞ்சாலையாக சென்னை - திருச்சி - மதுரை நெடுஞ்சாலை அமைந்துள்ளது. 

சென்னை - திருச்சி - மதுரை நெடுஞ்சாலையை தொடர்ந்து பல்வேறு மிக முக்கிய ரூட்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன. இந்த முயற்சியின் மூலம் 7 ஆயிரம் சில்லறை அவுட்லெட்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட இருக்கிறது. 

ஃபாஸ்ட் சார்ஜர்களை அமைத்து இருப்பதன் மூலம் வாடிக்கையாளர்களிடம் இருக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களின் ரேன்ஜ் பற்றிய கவலை மற்றும் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்களை கண்டறிவது பற்றிய கவலையை போக்க முடியும் என பாரத் பெட்ரோலியம் தெரிவித்து உள்ளது. "பல்வேறு பிரிவுகளில் சவுகரியமான தீர்வுகள் மற்றும் அனுபவங்களை பயனர்களுக்கு வழங்குவதில் பாரத் பெட்ரோலியம் எப்போதும் முன்களத்தில் இருந்து வருகிறது," என பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவன நிர்வாக இயக்குனர் பி.எஸ். ரவி தெரிவித்தார். 

நாடு முழுக்க முக்கிய நகரங்கள் மற்றும் பொருளாதார மையங்களை இணைக்கும் அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகளில் சீரான இடைவெளியில் CCS-2 எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்களை அமைக்க பாரத் பெட்ரோலியம் திட்டமிட்டு இருக்கிறது. இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க முடியும். 

2040 ஆண்டிற்குள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாக நிறுவனமாக மாற பாரத் பெட்ரோலியம் திட்டமிட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு பாரத் பெட்ரோலியம் நிறுவனம் நாடு முழுக்க இயங்கி வரும் சுமார் 9 ஆயிரம் பெட்ரோல் பங்க்களில் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் வசதியை ஏற்படுத்த திட்டமிட்டு இருப்பதாக அறிவித்தது. இதில் 7 ஆயிரம் பெட்ரோல் பங்க்களில் அடுத்த சில ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி வழங்கப்பட இருக்கிறது.