பஜாஜ் மற்றும் கே.டி.எம். நிறுவனங்கள் உருவாக்கி வரும் எலெக்ட்ரிக்  இருசக்கர வாகனத்தின் உற்பத்தி விவரங்கள் வெளியாகி உள்ளது.

பஜாஜ் ஆட்டோ மற்றும் கே.டி.எம். நிறுவனங்கள் இணைந்து உருவாக்கும் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தின் சீரியல் ப்ரோடக்‌ஷன் இந்த ஆண்டு இந்தியாவில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து இணையத்தில் வெளியாகி இருக்கும் தரவுகளில் புதிய எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனம் காமன் 48 வோல்ட் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பிளாட்ஃபார்மில் உருவாகி வருவது தெரியவந்துள்ளது.

இந்த பிளாட்ஃபார்மை பஜாஜ் ஆட்டோ மற்றும் கே.டி.எம். நிறுவனங்கள் இணைந்து கடந்த சில ஆண்டுகளாக உருவாக்கி வந்தன. நீண்ட கால ஆய்வுக்கு பின் இந்த மாடல் தற்போது உற்பத்திக்கு தயாராகும் நிலையை அடைந்துள்ளது. 2021 டிசம்பரில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கென பிரத்யேக ஆலையை உருவாக்குவதாக அறிவித்தது. மேலும் இந்த ஆலையில் உற்பத்தியாகும் வாகனங்கள் ஜூன் 2022 முதல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்து இருந்தது.

இந்த திட்டத்திற்கென பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ரூ. 300 கோடி முதலீடு செய்து இருக்கிறது. இந்த உற்பத்தி ஆலை ஐந்து லட்சம் சதுர அடி நிலப்பரப்பில் உருவாகி வருகிறது. இந்த ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும். இந்த ஆலை பஜாஜ் செட்டாக் உற்பத்தி செய்யப்படும் அகுர்டி ஆலை அமைந்துள்ள பகுதியிலேயே உருவாகி வருகிறது. 

2019 வாக்கில் கே.டி.எம். நிறுவனம் இந்த வாகனம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் என அறிவித்து இருந்தது. மேலும் இதன் உற்பத்தி 2022 ஆண்டு பஜாஜ் ஆலையில் நடைபெறும் என்றும் அறிவித்தது. அதன்படி இரு நிறுவனங்களின் முந்தைய திட்டம் எவ்வித இடையூறும் இன்றி செயல்படுத்தப்பட்டு வருவதாகவே தெரிகிறது.