அமெரிக்காவில் ஐபோன்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்ற அதிபரின் வலியுறுத்தலுக்கு மத்தியில், ஆப்பிள் 25% வரியைச் செலுத்தி வெளிநாடுகளிலேயே உற்பத்தியைத் தொடர விரும்புவதாகத் தகவல்.
அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்ற அமெரிக்க அதிபரின் வலியுறுத்தலுக்கு மத்தியில், ஆப்பிள் நிறுவனம் 25% வரியைச் செலுத்தி வெளிநாடுகளிலயே உற்பத்தியைத் தொடர விரும்புவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் உற்பத்தியைச் செய்வதை விட, இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு 25% வரி செலுத்துவது ஆப்பிளுக்கு லாபகரமானதாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஐபோன் உற்பத்தி
கடந்த வாரம் அமெரிக்க அதிபர், "அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் இந்தியாவிலோ அல்லது வேறு எங்கேயோ இல்லாமல், அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட்டு கட்டமைக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார். இதை மீறினால் இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என அச்சுறுத்தலும் விடுத்தார். இந்த அச்சுறுத்தல், ஆப்பிள் நிறுவனத்தை பெரும் நிதிச் சிக்கலில் ஆழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பிரபல ஆப்பிள் ஆய்வாளர் மிங்-சி குவோ (Ming-Chi Kuo) எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், "லாபத்தன்மை அடிப்படையில் பார்த்தால், அமெரிக்க சந்தையில் விற்கப்படும் ஐபோன்களுக்கு 25% வரியைச் சுமந்து கொள்வது, ஐபோன் அசெம்பிளிங் யூனிட்களை அமெரிக்காவிற்கு மாற்றுவதை விட ஆப்பிளுக்கு மிகவும் சிறந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐபோன் விலை உயருமா?
தற்போது ஆப்பிளின் பெரும்பாலான உற்பத்தி சீனாவில் நடைபெற்று வருகிறது. தற்போது அந்நிறுவனம் தனது உற்பத்தி உள்கட்டமைப்பை இந்தியாவிற்கு வேகமாக மாற்றி வருகிறது. பல ஆண்டுகளாக, ஃபாக்ஸ்கான் (Foxconn), பெகட்ரான் (Pegatron) போன்ற சப்ளையர்களுடன் ஆப்பிள் வலுவான தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த முழு உற்பத்தி உள்கட்டமைப்பையும் அமெரிக்காவிற்கு மாற்றுவது பல சவால்களைக் கொண்டுவரும்.
தற்போது ஐபோன் அசெம்பிளிங்கில் அமெரிக்காவின் பங்கு மிகக் குறைவு. உற்பத்தியை அமெரிக்காவிற்கு மாற்றுவதற்கு பல பில்லியன் டாலர் முதலீடுகள் தேவைப்படும். மேலும், வெட்புஷ் செக்யூரிட்டீஸ் (Wedbush Securities) மதிப்பிட்டபடி, அமெரிக்காவில் உற்பத்தி செய்தால் ஒரு ஐபோனின் விலை 3,500 டாலர் வரை அதிகரிக்கலாம். எனவே, அமெரிக்க அரசாங்கம் விதிக்கும் வரியைச் செலுத்துவது ஆப்பிளுக்கு நிதி ரீதியாக சிறந்த தெரிவாக இருக்கும் என்று குவோ கூறுகிறார்.
அமெரிக்காவின் வரி விதிப்பு
இந்த வரி விதிப்பு அமலுக்கு வந்தால், ஆப்பிள் ஐபோன்களின் விலையை அதிகரிக்கும் திட்டத்தையும் கொண்டுவரலாம். இது இறுதியாக நுகர்வோரையும் பாதிக்கும். அமெரிக்க அரசுக்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கும் இடையே வரும் வாரங்களில் இந்த விவகாரம் எப்படி தீவிரமடைகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அமெரிக்காவில் ஐபோன்கள் தயாரிக்கப்படாவிட்டால், இந்த ஆண்டு அல்லது அடுத்த சில மாதங்களில் அமெரிக்காவில் ஐபோன் விலைகள் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
